நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ஆவடியில் பகுதியில் உள்ள நீட் தேர்வு மையத்தில் கடந்த 4 ஆம் தேதி மாணவர்கள் தேர்வெழுதியபோது மழை காரணமாக மின்சாரம் தடை செய்யப்பட்டதாகவும் அதனால் வெளிச்சம் இல்லாத பகுதிகளில் தேர்வெழுத முடியாமல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் இருந்து மற்றொரு இருக்கைக்கு மாற்றப்பட்டதாக தெரிவித்து மறு தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மேலும் அந்த மனுவில், மின்சாரம் தடைபட்டபோது இன்வெர்ட்டர்கள் வசதி இல்லாத காரணத்தினால் மாற்று இருக்கைக்கு மாற்றப்பட்டோம் என்றும் அதனால் தேர்வு எழுத இடையூறு ஏற்பட்டதாகவும், அதற்காக கூடுதல் நேரம் கொடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். அத்துடன் மற்ற தேர்வு மையங்களுடன் ஒப்பிடுகையில் சமமான நேரம் ஒதுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணை இன்று(மே.17) சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது நீட் போன்ற தேர்வின்போது, இடையூறு ஏற்பட்டால் சமமான நேரங்களை ஒதுக்கித் தர வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்து, இது குறித்து மத்திய அரசு, தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது, விசாரணையை வரும் ஜூன் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.