Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“சாம்சங் நிறுவனம் மற்றும் தொழிலாளர்களின் நலன்கள் உறுதி செய்யப்பட வேண்டும்” - #CII மற்றும் #FICCI அறிக்கை!

08:44 PM Oct 09, 2024 IST | Web Editor
Advertisement

சாம்சங் தொழிலாளா்கள் போராட்டத்திற்கு விரைவில் தீர்வு காணும்படி இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு (FICCI) மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) அறிக்கை வெளியிட்டுள்ளது.

Advertisement

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த நான்கு வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோர் அடங்கிய குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்தார். இந்தக் குழுவினர் சாம்சங் நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில், தொழிற்சங்கம் அமைப்பதைத் தவிர, மற்ற அனைத்து கோரிக்கைகளும் நிறுவனத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆனால், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று சாம்சங் இந்தியா சிஐடியு தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. தொடர்ந்து, சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. போராட்டத்தை கைவிடுமாறு போலீசார் வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்த தொழிலாளர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வந்திருந்த சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜனும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு (FICCI) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “வணிகத்திற்கு உகந்த சூழல் மற்றும் வலுவான நிர்வாகத்தால் ஆதரிக்கப்படும் தமிழ்நாடு, இந்தியாவின் முன்னணி முதலீட்டு இடமாக உருவெடுத்துள்ளது. சென்னை சாம்சங் தொழிற்சாலையில் நடைபெற்று வரும் வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து கவலையடைவதுடன், ஊழியர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதில் தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள் சி.வி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா, டி.எம்.அன்பரசன் ஆகியோரின் முயற்சியைப் பாராட்டுகிறோம். மாநிலத்தின் தொழில்துறை வேகத்தையும் முதலீட்டாளர்களை ஈர்க்கும் தன்மையையும் பராமரிக்க விரைவான தீர்வை எட்டுவது இன்றியமையாதது.

அனைத்து பங்குதாரர்களையும் ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறோம். பணியாளர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் தீர்வைக் கண்டறிய நிர்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டும். பணியாளர் மற்றும் நிறுவனம் ஆகிய இருவரின் நலன்களும் உறுதி செய்யப்பட வேண்டும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இந்திய தொழில் கூட்டமைப்பு (தெற்கு) (CII) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “தமிழ்நாட்டில் தொழில் சர்ச்சைக்கு விரைவில், சுமூகமான தீர்வு காண CII வலியுறுத்துகிறது. பல தசாப்தங்களாக உலகம் முழுவதிலுமிருந்து அன்னிய நேரடி முதலீட்டை மாநிலத்திற்குள் கொண்டுவருவதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. அரசின் செயல்திறனுள்ள கொள்கைகள் மற்றும் எளிதாக வணிகம் செய்வது தொடர்பான பல நடவடிக்கைகள் காரணமாக, தமிழ்நாடு பல்வேறு துறைகளில், குறிப்பாக உற்பத்தியில் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.

சிஐஐ தமிழ்நாடு மாநில கவுன்சில் தலைவர் ஸ்ரீவத்ஸ் ராம், 'தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள அனைத்து பங்குதாரர்களும் அவர்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் சிறந்து விளங்குவதற்கும், செழிப்பதற்கும் உகந்த சூழ்நிலையை வழங்குவதில் மாநில அரசு எடுத்துள்ள முயற்சிகளை நாங்கள் மனதார பாராட்டுகிறோம்' என்று தெரிவித்துள்ளார். பொருளாதார நடவடிக்கைகளின் வேகமும், தமிழ்நாட்டின் உயர்வான பிம்பமும் நிலைத்திருக்க, சமீபகால தொழில் சர்ச்சையில் ஈடுபட்டுள்ள அனைத்து பங்குதாரர்களும், முன்கூட்டிய தீர்வை நோக்கி சுமுகமாகச் செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
CIICMO TamilNaduFICCIMK StalinNews7TamilsamsungSamsung workersTN Govt
Advertisement
Next Article