தான் படித்த பள்ளியில் தலைமை விருந்தினராக அழைக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் பிரபலம்!
பிரதமரிடம் விருது பெற்ற இன்ஸ்டாகிராமர் ஜான்வி சிங், தனது பள்ளிக்கு தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு தேசிய படைப்பாளிகள் விருதை வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த விருதுகளுக்கு யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற ஊடகங்களில் ஆக்கபூர்வமான செயல்படும் பயனர்களும் போட்டியிடலாம் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இன்ஸ்டாகிராமரான ஜான்வி சிங் என்பவர், ஹெரிடேஜ் ஃபேஷன் ஐகான் விருதைப் பிரதமர் மோடியிடம் இருந்து பெற்றார். விருதைப் பெற்ற ஜான்வி சிங் பிரதமரின் காலை தொட்டு வணங்க சென்றார். உடனே பிரதமரும் தலைகுணிந்து வணங்கினார். இந்த வீடியோ அப்போது வைரலாகியது. அதில் ஜான்வி சிங் மிகவும் பிரபலமடைந்தார்.
இந்நிலையில் தற்போது தான் படித்த பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக ஜான்வி சிங் அழைக்கப்பட்டுள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை பகிர்ந்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
“பல நிகழ்வுகளுக்கு சென்றிருந்தாலும், நாம் படித்த பள்ளி விழாவில் விருந்தினராக செல்வது மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்று. நான் படித்து நல்ல இடத்திற்கு செல்ல வேண்டும் என என்னை திட்டிய ஆசிரியர்களை நான் தவறாக நினைத்தேன். ஆனால் அவர்கள் தவறில்லை. நாம்தான் அவர்களை தவறாக புரிந்துள்ளோம். இன்று என் ஆசிரியர்களை எனது பள்ளியில் அன்புடனும், பெருமையுடனும் சந்தித்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன் பகிரப்பட்ட இந்த வீடியோ தற்போது வரை 57 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது.