Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் எண்ணற்ற தமிழ் வளர்ச்சித் திட்டங்கள் - தமிழ்ச் சான்றோர் பாராட்டு!

11:39 AM May 25, 2024 IST | Web Editor
Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் எண்ணற்ற தமிழ் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதற்கு தமிழ்ச் சான்றோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

Advertisement

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

"தமிழுயர்ந்தால் தமிழ்நாடு தானுயரும் அறிவுயரும் அறமும் ஓங்கும்" என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடிய வரிகளை இதயத்தில் ஏந்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும், தமிழை ஆட்சி மொழியாக்கிட அரும்பாடுபட்டு வருவதோடு தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக உலகத்தின் முதுமொழியாம் அமுதமெனும் தமிழ்மொழியை உயர்த்துதல், தமிழறிஞர்களுக்கு விருது வழங்குதல், அரிய தமிழ் நூல்களை நாட்டுடைமையாக்குதல்,

அயலகப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை தோற்றுவித்தல், மாணவர்களிடம் தமிழ் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் திருக்குறள் முற்றோதல், தமிழ்க் கூடல், தமிழ்மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு, தீராக்காதல் திருக்குறள் திட்டம். தமிழ் பரப்புரைக் கழகத்தின் வாயிலாக அயல்நாடு மற்றும் வெளி மாநில தமிழர்களுக்கு தமிழ் கற்பித்தல், உலகெங்கிலும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் வகையில், ஜனவரி திங்கள் 12 ஆம் நாள் அயலகத் தமிழர் தின விழா உள்ளிட்ட எண்ணற்ற நன்மை பயக்கும் திட்டங்களைத் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மாநில அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு உரிய அங்கீகாரம்:

1970-ஆம் ஆண்டு முதல் 'நீராரும் கடலுடுத்த' எனத் தொடங்கும் பாடல் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக நடைமுறையில் உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17.12.2021 அன்று தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாநிலப் பாடலாக அறிவித்து, இப்பாடல் பாடப்படும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நின்று மரியாதை செலுத்திட வேண்டுமென்று ஆணையிட்டுத் தமிழ்மொழிக்கு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் சார்பில் 35 விருதுகள்:

தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் தமிழறிஞர்களை அடையாளம் கண்டு அவர்களைப் பெருமைப்படுத்திடும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் திருவள்ளுவர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, முதலமைச்சர் கணினித் தமிழ் விருது. தமிழ்ச்செம்மல் விருதுகள், இலக்கண விருது, இலக்கிய விருது, தூயத் தமிழ் பற்றாளர் விருதுகள் உள்ளிட்ட 35 இனங்களில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி சிறப்புச் செய்யப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுத் தொகையை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தியதோடு, புதியதாக இலக்கிய மாமணி விருது தோற்றுவிக்கப்பட்டு ஆண்டுதோறும் மூன்று அறிஞர்களுக்கு தலா விருது தொகை ரூ.5 லட்சம்வழங்கிட ஆணையிட்டுள்ளார். கடந்த மூன்றாண்டுகளில் 260 விருதாளர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதியதாக உருவாக்கப்பட்டு பொதுத் துறையால் இரண்டு ஆண்டுகள் வழங்கப்பட்ட தகைசால் தமிழர் விருதும் இவ்வாண்டு முதல் தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக வழங்கப்படவுள்ளது.

நூல்கள் நாட்டுடைமை:

தமிழறிஞர்களின் படைப்புகள் எளிய முறையில் மலிவு விலையில் மக்களுக்கு கிடைத்திடும் வகையிலும், தமிழறிஞர்களின் கருத்துக் கருவூலங்கள் உலக மக்கள் அனைவரையும் சென்றடைந்திட வேண்டும் என்கின்ற உயரிய நோக்கத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த 3 ஆண்டுகளில் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன், சிலம்பொலி சு.செல்லப்பன் உள்ளிட்ட புகழ் வாய்ந்த 22 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி, அவர்களின் மரபுரிமையர்க்கு 2 கோடியே 85 லட்சம் ரூபாய் நூலுரிமைத்தொகையும் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் உயரிய சிந்தனையில் உதித்த தமிழறிஞர்களுக்கான கனவு இல்லத் திட்டம்:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97வது பிறந்த நாளான 03.06.2021 அன்று கனவு இல்லத் திட்டத்தின்கீழ் சாகித்திய அகாதமி விருது மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் செம்மொழித் தமிழ் விருது பெற்ற தமிழறிஞர்களுக்கு தமிழ் நாட்டிற்குள் வீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, முதற்கட்டமாக 6 அறிஞர்கட்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் உயர் வருவாய்ப் பிரிவு வீடுகளை முதலமைச்சர் வழங்கப்பட்டு, தமிழுக்கும் தமிழறிஞர்களுக்கும் பெருமை சேர்த்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இத்திட்டத்தினால் பயனடைந்த தமிழ்ச் சான்றோர்களும் ஆன்றோர்களும், அகமகிழ்ந்து பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அயலகத்திலும் அண்டை மாநிலங்களிலும் தமிழ் இருக்கைகள் நிறுவிடவும் தமிழ்ப்பணி ஆற்றிடவும் நிதியுதவி:

அயல்நாடு வாழ் தமிழர்களின் தமிழ் ஆர்வத்தினை ஊக்கப்படுத்துகின்ற வகையில், அயலகப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் தோற்றுவித்தல் திட்டத்தின்கீழ் முதலமைச்சர் ஜெர்மனி நாட்டிலுள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடர்ந்து செயற்படுவதற்காக 1 கோடியே 25 லட்சம் ரூபாயும், ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட 2 கோடியே 50 லட்சம் ரூபாயும் (3 லட்சம் அமெரிக்க டாலர்). நவி மும்பைத் தமிழ்ச் சங்கக் கட்டட மேம்பாட்டிற்கு 75 லட்சம் ரூபாயும் புதுடெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கியவியல் என்ற தனித்துறை உருவாக்கிட 5 கோடி ரூபாயும் ஒரிசா மாநிலம், புவனேஸ்வர் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் மொழியைக் கற்பித்திட ஏதுவாக வகுப்பறைகள் அமைத்திட ரூ.15.00 லட்சம் ரூபாயும் வழங்கி, தாய்மொழியாம் தமிழ் மொழியை அயலகத்திலும், அண்டை மாநிலங்களிலும் வளர்த்திட நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளதை அயலகத் தமிழர்கள் நெஞ்சார பாராட்டியும், வரவேற்றும் உள்ளனர்.

திருக்குறளின் அருமை, பெருமைகளை அறிந்திட மாணவர்களை ஊக்கப்படுத்திடும் "குறள் முற்றோதல்" திட்டம்:

1.1.2000 ஆம் ஆண்டு குமரிமுனையில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வரும் "குறள் முற்றோதல்" திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் 1330 குறட்பாக்களையும் முற்றோதல் செய்த 451 மாணவர்களுக்கு தலா ரூ.15,000 வீதம் மொத்தம் 63 இலட்சத்து 46 ஆயிரத்து 500 ரூபாய் குறள் பரிசுத் தொகை வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளனர்

முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ் மன்றம் வாயிலாக மாணவர்களிடம் தமிழ் உணர்வை ஊக்கப்படுத்திட தமிழ்க்கூடல் திட்டம்:

"தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களிடையே தமிழ் ஆர்வத்தினை அதிகரிக்க அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் தமிழ் மன்றங்கள் அமைத்து மாணவர்களிடையே தமிழ் சார்ந்த போட்டிகளை நடத்திட கல்லூரிக் கல்வி இயக்ககம், தொழில் நுட்பக் கல்வி இயக்ககம், பொறியியல் கல்லூரி இயக்ககம் ஆகியவற்றால் தெரிவு செய்து அனுப்பப்பட்ட 100 கல்லூரிகளுக்கு ஒவ்வொரு கல்லூரிக்கும் வைப்புத் தொகையாக ரூ. 5 லட்சம் என மொத்தம் ரூபாய் 5 கோடி ரூபாயும் முதலாண்டில் போட்டிகள் நடத்திட கூடுதலாக ரூபாய் 36 லட்சமும் வழங்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் ஆணையிடப்பட்டுள்ளது.

இதே போன்று, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழ்மொழியின் தொன்மை பெருமைகளை அறியவும், தமிழ் மொழி இலக்கிய இலக்கணங்களின்மீது பற்றும் ஆர்வமும் கொள்ளவும் தமிழுக்குத் தொண்டாற்றிய தமிழறிஞர்கள் தமிழ்ச்சான்றோர்கள் பற்றி அறிந்து - கொள்ளவும் உதவும் வகையில் தமிழ்நாடு முழுவதுமுள்ள 6218 அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளிலுள்ள தமிழ் மன்றங்கள் மூலம் - ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுக்கு மூன்று 'தமிழ்க்கூடல்' நடத்திட ஆண்டுதோறும் பள்ளி ஒன்றுக்கு ரூ.9000/- என மொத்தம் ரூபாய் 5 கோடியே 59 லட்சத்து 62 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடையே தமிழ் உணர்வினை ஊட்டி ஊக்கப்படுத்திட, கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள், தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு, இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை, தமிழால் முடியும், இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை. இலக்கிய வினாடி வினா உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடத்தப்பட்டு பரிசுகளும் பாராட்டுகளும் வழங்கிச் சிறப்பிக்கப் பட்டு வருகின்றன.

தீராக் காதல் திருக்குறள் திட்டம்:

'தீராக் காதல் திருக்குறள்' என்ற பெயரில் தமிழ் இணையக் கல்விக் கழகம் வாயிலாக தீந்தமிழ் நிகழ்ச்சிகளை நடத்திட 25 லட்சம் ரூபாய் முதலமைச்சர் வழங்கியுள்ள நிதியுதவியில் குறளோவியம் எனும் தலைப்பில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டு, மாணவர்கள் வரைந்த ஓவியங்களைக் கொண்டு திருக்குறள் நாள்காட்டி உருவாக்கப்பட்டு முதலமைச்சரால் 15.1.2022 அன்று வெளியிடப்பட்டு, ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

தமிழ் பரப்புரைக் கழகம்:

அயல்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்குத் தமிழ் கற்பித்திட தமிழ் பரப்புரைக் கழகம் உருவாக்கிட 1 கோடி ரூபாயும், சங்க இலக்கிய நூல்களிலுள்ள வாழ்வியல் தத்துவங்கள், கருத்துகள் எல்லாம் எழிலேடாக உருவாக்கப்பட வேண்டும் எனும் விழைவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட்ட 15 லட்சம் ரூபாய் நிதியுதவியில் தயாரிக்கப்பட்ட எழிலேடு புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 131 -வது பிறந்த நாளான 29.4.2022 அன்று வெளியிட்டு சிறப்பிக்கப்பட்டது.

தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் வாயிலாக ரூ.10.40 லட்சம் செலவில், புகழ்பெற்ற 38 தலைவர்கள், தமிழறிஞர்கள் ஆகியோரின் அரிய ஒலி/ஒளிப் பொழிவுகளை இணைய தளத்தில் அனைவரும் அணுகும் வகையில் ஆவணமாக்கிட ஒலி/ஒளிப் பொழிவுகள் மின் வடிவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.5 கோடியில் தமிழில் அண்ணல் அம்பேத்கர் படைப்புகள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணல் அம்பேத்கரின் அனைத்துப் படைப்புகளையும் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக தமிழில் மொழிபெயர்த்திட 5 கோடி ரூபாய் வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள்.

ரூ.5 கோடியில் மின்னூல் பதிப்புகளாகத் தந்தை பெரியார் நூல்கள் !

தமிழக வரலாற்றில் முதன்முறையாக சமுதாயச் சிற்பி தந்தை பெரியாரின் சிந்தனைகளை 21 இந்திய மற்றும் உலக மொழிகளில் அச்சு மற்றும் மின்னூல் பதிப்புகளாகத் தயாரித்திட தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்கு 5 கோடி ரூபாய் வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய முயற்சியினால் தமிழ் மொழி வளர்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்களைக் கடந்த மூன்றாண்டுகளாக நிறைவேற்றி வருவதுடன், பண்டையத் தமிழர் பண்பாட்டையும், பழங்காலத் தமிழர்களின் எழுத்தறிவு, நாகரிக வாழ்வு முறைமைகளையும் நுண்மையோடு பறைசாற்றும் வகையில், கீழடியில் அருங்காட்சியகம் அமைத்துச் சிறப்பித்ததோடு. அதன் தொடர்ச்சியாகப் பொருநையிலும் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சனவரி 12 அயலகத் தமிழர் தின விழா !

உலகெங்கிலும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும், அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும் சனவரி திங்கள் 12-ம் நாளினை அயலகத் தமிழர் தினமாக அறிவிக்கப்பட்டு, தமிழ் வெல்லும் என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு. நடப்பாண்டில் அயலகத் தமிழர் மாநாடும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

கணியன் பூங்குன்றனார் நினைவுத்தூண்:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டம் மகிபாலன் பட்டியில் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" எனும் செம்மொழித் தொடர் தந்த கணியன் பூங்குன்றனார் நினைவுத் தூணைக் காணொலிக் காட்சி வாயிலாக 22.1.2024 அன்று திறந்து வைத்தார்.

இராபர்ட் கால்டுவெல், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்:

முதலமைச்சர் உருவாக்கிய முத்தமிழறிஞர் மொழி பெயர்ப்புத் திட்டத்தின் முதல் நூலாக அயல்நாட்டு அறிஞர் டாக்டர் இராபர்ட் கால்டுவெல் அவர்கள் எழுதிய "A Comparative Grammar of the Dravidian of South Indian Family of Languages" எனும் நூல் பேராசிரியர் பா.ரா.சுப்பிரமணியன் அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் கூட்டு வெளியீடாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 16.2.2022 அன்று வெளியிடப்பட்டது.

தமிழில் புகழ்வாய்ந்த கிரேக்க பெருங் காப்பியங்கள்:

முதலமைச்சரின் தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் பிறநாட்டு இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்து அச்சிட்டு வெளியிடும் பணியில் புகழ்வாய்ந்த கிரேக்கக் காப்பியங்களான ஓமரின் 'இலியட்', 'ஒடிசி' ஆகிய இருபெரு நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு 12.7.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளன.

2025-இல் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு:

இன்பத் தமிழுக்கு மேலும் சிறப்புகள் சேர்க்கும் வகையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சென்னையில் வரும் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஐந்து நாட்கள் சீரோடும் சிறப்போடும் சிந்தனைச் செயல்திறத்தோடும் மாபெரும் அளவில் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்கள்.

இந்த அறிவிப்பு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் மீது கொண்டுள்ள தீராப் பற்றுதல் உலகுக்குப் பறைசாற்றுவதாக அமைந்து, அவருக்குப் புகழ் சேர்த்துள்ளது என்றால் அது மிகையாகாது.

தமிழ்நாட்டில் முதன்முறையாக பார்போற்றும் வகையில் பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி நடத்தியதும், தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கியும், திருக்கோயில்களில் தமிழ் வழிபாட்டினை முன்னிறுத்துவது உள்ளிட்ட எண்ணற்ற தமிழ்ப்பணித் திட்டங்களை நிறைவேற்றியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
arivalayamCMO TamilNaduDMKMK StalinNews7Tamilnews7TamilUpdatesTamilTN Govt
Advertisement
Next Article