#INDvsBAN | இந்தியா - வங்கதேசம் இடையேயான டெஸ்ட் போட்டி | டிக்கெட் வாங்குவதில் ரசிகர்கள் குழப்பம்!
இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் 4வது நாளான இன்று கவுண்டர் மூலம் டிக்கெட் வழங்காமல் ஆன்லைன் மூலம் வழங்குவதால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 19ம் தேதி இந்தியா - வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. தொடர்ந்து மூன்று நாட்கள் போட்டி நடந்து முடிந்த நிலையில் 4வது நாளாக இன்று நடைபெறுகிறது. போட்டி நடந்த கடந்த மூன்று நாட்களுமே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள கவுண்டர்கள் மூலம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.
கவுண்டர் மூலம் டிக்கெட் வழங்கப்பட்டதால் ரசிகர்களுக்கு போதுமான டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதனுடன் சிலர் குறைந்த விலையில் டிக்கெட்டுகளை வாங்கி மற்றவர்களிடம் அதிக விலைக்கு விற்பதாகவும் கூறப்பட்டது. இந்த சூழலில், 4வது நாள் போட்டிக்கான டிக்கெட்டுகள் முழுவதும் கவுண்டர் மூலம் வழங்கப்படாது எனவும் ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்படும் எனவும் கிரிக்கெட் சங்கள் தெரிவித்தது.
அதன்படி, நேற்று மாலை முதல் ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை அறியாத பலரும் 3 நாட்களை போல் இன்றும் டிக்கெட் விற்பனை செய்யப்படும் என சேப்பாக்கம் மைதான கவுண்டர்களில் குவிந்து வருகின்றனர். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்துள்ளனர். அதனுடன், ஆன்லைன் மூலமும் சரியாக டிக்கெட்டுகளை பதிவு செய்ய முடியவில்லை என ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.