#INDvsBAN | மீண்டும் குறுக்கிட்ட மழை…. 2வது நாளாக இந்தியா பங்களாதேஷ் டெஸ்ட் போட்டி நிறுத்தப்பட்டது...
இந்தியா பங்களாதேஷ் டெஸ்ட் போட்டியை மழை காரணமாக இன்று இரண்டாவது நாள் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டு விட்டது.
இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த நிலையில் இந்த போட்டியில் மழையும் மூன்றாவது அணியாக பெரிய பிரச்சனை செய்து வருகிறது.
நேற்று துவங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த நிலையில் மழை குறுக்கீடு செய்த காரணத்தினால் முதல் நாளில் 34 ஓவர்கள் மட்டுமே பந்து வீசப்பட்டது. பங்களாதேஷ் அணி 107 ரன்னுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளில் குறைந்தபட்சம் 50 ஓவர்களாவது போட்டி நடத்தப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். வானிலை அறிக்கையிலும் முதல் நாளை விட இரண்டாவது நாள் ஓர் அளவுக்கு சுமாராகவே இருந்தது. எனவே ரசிகர்கள் மைதானத்திற்கு வந்திருந்தார்கள். இப்படியான நிலையில் நேற்றை விட இன்று மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது. மேலும் கான்பூர் மைதானத்தில் மழை நீர் வடிகால் வசதி மிகவும் சுமாராக இருக்கிறது. இதன் காரணமாக மழை நின்றால் கூட போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக இன்று இரண்டாவது நாள் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டு விட்டது.
இதற்கு முன்பாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக பெங்களூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டாவது மற்றும் ஐந்தாவது நாள் மழையின் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டு இருந்தது. பிறகு 9 வருடங்களாக இந்தியாவில் டெஸ்ட் போட்டியில் முழு நாளும் ரத்து செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.