#INDvsAUS : ஜெய்ஸ்வால், கோலி சதத்தால் ஆஸி. அணிக்கு 534 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 533 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், ஆட்டத்தை டிக்ளர் செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர்- கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் முதல் இன்னிங்ஸில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து பௌலிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன்மூலம் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன், இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடியது.
முதல் இன்னிங்ஸை போலல்லாமல், இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கில் கலக்கிய இந்திய அணி, 134.3 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 487 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தை டிக்ளர் செய்தது. இந்திய தரப்பில் சிறப்பாக விளையாடி சதம் அடித்த தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 161 ரன்கள் குவித்தார். விராட் கோலி சதம் அடித்தார். கேஎல் ராகுல் 77 ரன்கள் எடுத்தார்.
இதன் மூலம் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 533 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து 534 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தொடங்கியது.
இதனையடுத்து 2வது இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு முதல் ஓவரே அடி விழுந்தது. துவக்க வீரர் நாதன் ‛டக்' அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் கம்மின்ஸ் (2), லபுசேன் (3) சொற்ப ரன்களில் வெளியேற 12 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்தது. அத்துடன் 3வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. உஸ்மான் கவாஜா 3 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். இந்திய தரப்பில் பும்ரா 2, சிராஜ் 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.