இந்திய அளவில் முதல்முறையாக #AI தொழில்நுட்ப வளாகத் தேர்வு... எங்கு தெரியுமா?
சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் இந்திய அளவில் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வளாகத் தேர்வு (நேர்காணல்) நடத்தப்பட்டது.
செயற்கை நுண்ணறிவு (AI) நமது சமூகத்தின் பல்வேறு அம்சங்களை முற்றிலும் மாற்றி வடிவமைக்கும் ஆற்றலைக் கொண்ட ஒரு சிறப்பான தொழில்நுட்பமாகும். இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பல்வேறு துறைகளில் அதிக வேகமாக நடந்து வருகிறது. இந்த தொழில்நுட்பத்தால் மனிதர்களை போல சிந்திக்கவும், பகுப்பாய்வு செய்யவும், செயல்படவும் முடியும் என கூறப்படுகிறது. AI கருவிகளின் உதவியுடன் மக்களை கவரும் விதமாக படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கபடுகின்றன. காலப்போக்கில், இது நம் வாழ்வின் குறிப்பிடத்தக்க தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு மாணவா்களுக்கான வளாகத் தோ்வு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் நேற்று நடைபெற்றது. இந்த வளாகத் தோ்வின்போது, மனிதவளப் பிரிவு அதிகாரிகள் மாணவா்களை தனித்தனியாக சந்தித்து அவர்களிடம் நேர்காணல் நடத்துவர். அதற்கு சிறப்பாக பதிலளிக்கும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படுகிறது.
ஆனால், சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்ற தேர்வில் மனிதவளப் பிரிவு அதிகாரிகள் யாரும் இன்றி மாணவ, மாணவியா் தோ்வில் கலந்துகொண்டனா். அதாவது, மாணவர்களின் கணினியுடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இணைக்கப்பட்டு அதன் வாயிலாக கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பதிவு செய்யப்பட்டன.
இது குறித்து, சேலம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வா் பேராசிரியா் விஜயன் கூறியதாவது, "சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் உயா்கல்வி பயில விரும்புவோரை தவிர மற்ற அனைவருக்கும் வளாகத் தோ்வு அடிப்படையில் வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்திய அளவில் முதல்முறையாக வளாகத் தோ்வு நடத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நோ்காணல் தொடா்பான மன அழுத்தம், பதட்டத்தில் இருந்து மாணவா்கள் விடுபட வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது."
இவ்வாறு சேலம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வா் பேராசிரியா் விஜயன் தெரிவித்தார்.