#Chennai விமான சாகச நிகழ்ச்சி | வீடு திரும்பும் மக்கள்; ரயில் நிலையங்களில் அலைமோதிய பயணிகளை கூட்டம்!
மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்று முடிந்த நிலையில் மக்கள் வீடு திரும்பும் நிலையில், புறநகர் மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதி காணப்படுகின்றது.
இந்திய விமானப்படை கடந்த 1932ம் ஆண்டு அக்.8ம் தேதி தொடங்கப்பட்டது. விமானப் படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவடைந்து 93-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், சென்னையில் இன்று (அக். 6) மிகப்பெரிய விமான வான் சாகச நிகழ்ச்சி மெரினா கடற்கரையில் காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து அதிகளவில் பொதுமக்கள் குடும்பத்துடன் மெரினா கடற்கரைக்கு வருகை தந்தனர். இதனால், புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் கூட்டம் அலைமோதியது.
இதையடுத்து, இந்த நிகழ்ச்சி நிறைவடைந்ததையடுத்து மெரினாவில் இருந்து மக்கள் கிளம்பி வருகின்றனர். ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் புறப்பட்ட நிலையில் பல இடங்களிலும் நெரிசல் காணப்படுகிறது. சென்னை அண்ணா சாலை, ஆர்.கே. சாலை, செம்மொழி பூங்கா உள்ளிட்ட பல இடங்களில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்தபடி செல்கின்றன.
இதையும் படியுங்கள் : அலைமோதிய கூட்டம் | 3.5 நிமிடங்களுக்கு ஒரு முறை #Metro சேவை…மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!
நிகழ்ச்சி முடிவடைந்து ஒரு மணிக்கு பிறகு மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் சேப்பாக்கம் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் குவிந்ததால் கடும் கூட்ட நெரிசலில் சிக்கித்தவித்தனர். போதிய ரயில்கள் இயக்கப்படாததால் வேளச்சேரி ரயில் நிலையத்தில் கட்டுக்கடங்காத வகையில் மக்கள் கூட்டம் திரண்டிருந்தனர். திருவல்லிக்கேணியின் பல பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும், போதிய பேருந்து வசதியும் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
திருவல்லிக்கேணி பாரதி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கிக்கொண்டது. துரிதமாக போராடி போலீசார் ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். சென்னை மாநகரம் முழுவதும் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.