டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி! 600 ரன்களை கடந்து சாதனை...
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி புதிய சாதனை படைத்துள்ளது.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை திறம்பட சமாளித்தனர்.
பொறுப்பாக ஆடிய இருவரும் சதமடித்து அசத்தினர். ஷபாலி வர்மா-ஸ்மிரிதி மந்தனா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 292 ரன்கள் சேர்த்த நிலையில், மந்தனா 149 ரன் எடுத்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய சுபா சதீஷ் 15 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ஷபாலி வர்மாவுடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி சேர்ந்தார்.
நிதானமாக ஆடிய ஷபாலி வர்மா இரட்டை சதம் அடித்து, 205 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து ஜெமிமா 55 ரன்னிலும் அவுட்டானார். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 98 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 525 ரன்கள் குவித்தது. இதன்மூலம் மகளிர் டெஸ்ட் போட்டியில் 1 நாளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையை இந்திய மகளிர் அணி படைத்தது.
இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 69 ரன்னும், ரிச்சா கோஷ் 86 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். இதன்மூலம் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோர் (603) விளாசிய அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதற்குமுன் 2024 பிப்ரவரியில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், ஆஸ்திரேலிய அணி 575 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அடுத்ததாக தனது முதல் இன்னிங்கில் களமிறங்கியுள்ள தென்னாப்பிரிக்கா அணி 1 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் அடித்துள்ளது.