#INDWvsWIW : மேற்கிந்திய தீவுகள் அணியை ஒயிட்வாஷ் செய்த இந்தியா!
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3 போட்டிகளையும் கைப்பற்றி இந்தியா வெற்றிப் பெற்றது.
மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் இரு ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வதோதராவில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மேற்கிந்திய அணி, இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க இயலாமல் 38.5 ஓவர்களிலேயே 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் தீப்தி சர்மா 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
இதனையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணி, 28.2 ஓவர்களிலேயே 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களை குவித்தது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றி, மேற்கிந்திய தீவுகள் அணியை ஒயிட்வாஷ் செய்தது. தீப்தி சர்மா ஆட்ட நாயகியாகவும், ரேனுகா சிங் தொடர் நாயகியாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.