இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் - என்ன காரணம்?
டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதில் கடந்த 29 ஆம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணியானது 176 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியானது 169 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதன் மூலமாக இந்தியா 17 ஆண்டுகளுக்கு பிறகு 2ஆவது முறையாக டிராபியை வென்றது. இந்திய அணி டிராபியை வென்ற சில நிமிடங்களில் விராட் கோலி டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த பிறகு ரோகித் சர்மாவும் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவர்களைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜாவும் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், டிராபி வென்று 2 நாட்கள் ஆகியும் இன்னும் இந்திய அணி வீரர்கள் நாடு திரும்பவில்லை. இறுதிப் போட்டி நடைபெற்ற பார்படாஸை புயல் தாக்கியிருக்கிறது. கிரேடு 3 என்று சொல்லப்படும் சூறாவளியான பெரில் என்ற புயல் தாக்கியிருக்கிறது.
இதன் காரணமாக பார்படாஸில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஹோட்டல், ரெஸ்டாரண்ட், போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய வீரர்கள் (இந்திய நேரப்படி) இன்று இரவு 8.30 மணிக்கு நாடு திரும்ப திட்டமிட்டிருந்த நிலையில், கடுமையான புயல் தாக்கம் காரணமாக அவர்களால் நாடு திரும்ப முடியவில்லை.
தற்போது இந்திய அணி வீரர்கள் ஹில்டான் ஹோட்டலில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. புயல் காரணமாக அவர்களால் நாடு திரும்ப முடியவில்லை. முதலில் பார்படாஸிலிருந்து நியூயார்க் சென்று பிறகு அங்கிருந்து துபாய் வழியாக இந்தியா வர இந்திய வீரர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், பார்படாஸ் புயல் காரணமாக அவர்களால் அங்கிருந்து எங்கும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்திய அணி வீரர்கள் தங்கியிருந்த ஹில்டன் ஹோட்டல் அருகிலுள்ள கடற்கரையில் மெரில் புயல் தாக்கியுள்ளது. புயல் கரையை கடந்த பிறகே இந்திய அணி வீரர்கள் வெளியேற முடியும். இந்த நிலையில் தான் ஆங்கிய செய்தி நிறுவங்களிடமிருந்து வெளியான செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பார்படாஸ் புயல் காரணமாக இந்திய அணி வீரர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி இந்திய அணி வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலில் பணியாளர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், வீரர்கள் வரிசையில் நின்று பேப்பர் பிளேட்டுகளில் இரவு உணவு சாப்பிடும் நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. எனினும், இந்திய அணி வீரர்கள் நாடு திரும்ப இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், தென் ஆப்பிரிக்கா வீரர்கள் தனி விமானம் மூலமாக தங்களது நாட்டிற்கு திரும்பியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.