டொமினிகன் நாட்டிற்கு சுற்றுலா சென்ற இந்திய வம்சாவளி மாணவி மாயம்!
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய வம்சாவளி மாணவி சுதிக்சா கோணங்கி (வயது 20). இவர் அமெரிக்காவின் குடியுரிமை பெற்றவர். அவர்களின் குடும்பத்தினர் விர்ஜினியா மாநிலம் லவுடவுன் கவுண்டியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், சுதிக்சா கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனது மாணவிகளுடன் டொமினிகன் குடியரசு நாட்டிற்கு சுற்றுலா சென்றார்.
கடந்த 6ம் தேதி அங்குள்ள பன்டா கனா நகரில் உள்ள கடற்கரைக்கு சென்ற அவர் மாயமானார். அவர் காணாமல் போனதாக உள்ளூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர். கடற்கரையில் வாக்கிங் சென்றபோது அவர் காணாமல் போயிருக்கலாம் என டொமினிகன் குடியரசு நாட்டின் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அந்த மாணவி கடலில் மூழ்கி இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. எனவே, கடற்பகுதி மற்றும் கடலோர பகுதிகளில் மீட்புக் குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாணவி கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. மாயமாகி 6 நாட்களாகியும் மாணவி குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. பல்வேறு வன்முறை சம்பவங்கள் குறித்த அச்சுறுத்தல் இருப்பதால் டொமினிகன் குடியரசுக்கு செல்லும் அமெரிக்கர்கள் கவனமுடன் இருக்கும்படி அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.