சர்ஃபராஸ் கான் தந்தைக்கு "சர்ப்ரைஸ்" கொடுத்த ஆனந்த் மஹிந்திரா!
அறிமுக கிரிக்கெட் போட்டியில் 62 ரன்கள் விளாசிய இந்திய கிரிக்கெட் வீரர் சர்ஃபராஸ் கானை பாராட்டும் வகையில், அவரது தந்தைக்கு தார் காரை பரிசாக வழங்குவதாக மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார்.
குஜராத் ராஜ்காட் நகரத்தில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியைப் பொறுத்த வரையில் சர்ஃபராஸ் கான் மற்றும் துருவ் ஜூரெல் ஆகியோர் அறிமுகம் செய்யப்பட்டனர்.
இந்த போட்டியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ஜெய்ஸ்வால் 10 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த சுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ரஜத் படிதார் 5 ரன்களில் நடையை கட்டினார். ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் ஜோடி சேர்ந்து விக்கெட்டை கட்டுப்படுத்தி ரன்கள் சேர்த்தனர். கடைசியாக 196 பந்துகளில் 14 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 131 ரன்கள் குவித்து ரோகித் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் வீடியோவுடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்லார். அந்த பதிவில்,
“தைரியத்தை இழந்துவிட வேண்டாம். கடின உழைப்பு. தைரியம். பொறுமை. ஒரு தந்தையின் குணங்களை விட, ஒரு குழந்தைக்கு ஊக்கமளிக்க சிறந்த குணங்கள் என்ன உள்ளது? தன் குழந்தைக்கு உத்வேகம் தரும் பெற்றோராக இருப்பதற்காக, சர்ஃபராஸின் தந்தை நௌஷாத் கான் ஏற்றுக்கொண்டால் அவருக்கு தார் காரை பரிசாக அளிப்பது எனது பாக்கியம் மற்றும் கௌரவம்.” என பகிர்ந்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.