தென்னாப்பிரிக்காவை 143 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்து அபார வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்க மகளிரணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், ஒரு டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் இன்று பெங்களூவில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில் தொடங்கியது. பெங்களூருவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் எடுத்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா சதம் விளாசி அசத்தினார். அவர் 127 பந்துகளில் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, தீப்தி சர்மா அதிகபட்சமாக 37 ரன்களும், பூஜா வஸ்த்ரகார் 31 ரன்களும் எடுத்தனர்.
தென்னாப்பிரிக்கா தரப்பில் அயபோங்கா காஹா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மசபாட்டா க்ளாஸ் 2 விக்கெட்டுகளையும், அன்னேரி டெர்க்சன், ஷாங்கேஷ் மற்றும் மிளாபா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி 122 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சூன் லூஸ் 33 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, சினாலோ ஜாஃப்டா 27 ரன்களும், மாரிஷேன் காப் 24 ரன்களும் எடுத்தனர்.
இதையும் படியுங்கள் : மத்தியப் பிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் இடிப்பு! – 150 பசுக்கள் கையகப்படுத்தப்பட்டன!
இந்தியா தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அறிமுக வீராங்கனை ஆஷா ஷோபனா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளையும், ரேனுகா தாக்குர் சிங், பூஜா வஸ்த்ரகார், மற்றும் ராதா யாதவ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென்னாப்பிரிக்க அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.