”விவசாயிகள் நலனில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது”-டிரம்பிற்கு பிரதமர் மோடி மறைமுக பதில்!
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த வாரம் இந்தியாவின் பொருட்களுக்கு அமெரிக்காவில் 25 சதவீத வரி விதித்தார். மேலும் அவர், ரஷியவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி சுட்டிகாட்டி நேற்று மேலும் இந்தியப் பொருட்களின் மீதான வரியை 25 சதவீதம் உயர்த்தினார். இதன் மூலம் இந்தியா மீது விதிக்கப்பட்ட மொத்த வரியானது 50 சதவீதமாக உயர்ந்துள்ளன. இது உலக நாடு ஒன்றிற்கு அமெரிக்காவால் விதிக்கப்பட்ட அதிகபட்ச வரியாகும். இதனை தொடர்ந்து இந்த வரிவிதிப்பிற்குபதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்தியா மீதான அமெரிக்காவின் கூடுதல் வரியானது துரதிர்ஷ்டவசமானது என்றும் நியாயமற்றவை என்றும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவைப் பொறுத்தவரை விவசாயிகளின் நலனுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். விவசாயிகள், மீனவர்கள் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது; விவசாயிகளின் நலனுக்காக எவ்வளவு விலை கொடுக்கவும் தயார். விவசாயிகளின் நலனுக்காக என்னுடைய தனிப்பட்ட நலன்களில் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை.மரபணு மாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதியில்லை” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு பிரதமர் மோடி மறைமுக பதில் அளித்துள்ளார்.