இந்தியாவுக்கு 3-ஆவது ஒலிம்பிக் பதக்கம் : 50 மீ ஏர் ரைபிள் பிரிவில் ஸ்வப்னில் குசேல் வெற்றி!
ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கிச்சுடுதல் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியா வெண்கலம் வென்று அசத்தியுள்ளது.
சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக்ஸ் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரீஸ் நகரில் கடந்த ஜூலை 26ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இப்போட்டிகள் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது. பாரீஸில் நடைபெறும் 33வது ஒலிம்பிக்ஸ் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், ஆண்களுக்கான துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் (50m Rifle 3 Positions) பிரிவின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே உள்பட 8 வீரர்கள் தகுதி பெற்றனர். இவர்களுக்கு இடையில் நடைபெற்ற இறுதி போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே 3-வது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார்.
இதையும் படியுங்கள் : லட்சக்கணக்கில் எகிறிய ராகுல் காந்தி தைத்த காலணிகளின் மதிப்பு | கோடி ரூபாய் கொடுத்தாலும் யாருக்கும் கொடுக்க மாட்டேன் என கூறும் தொழிலாளி!
இந்த போட்டியில் ஸ்வப்னில் குசாலே 451.4 புள்ளிகள் பெற்றார். சீன வீரர் யுகுன் லியு 463.6 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். உக்ரைன் வீரர் செர்கிய் குலிஷ் 461.3 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்த பதக்கத்துடன் இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கம் வென்றுள்ளது. இந்த மூன்று பதக்கங்களும் துப்பாக்கிச்சுடுதல் போட்டி மூலம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.