பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த கூகுளின் ‘ஜெமினி AI’ - மத்திய அரசு குற்றச்சாட்டு!
பிரதமர் மோடிக்கு எதிராக செயற்கை நுண்ணறிவு தளம் பாகுபாடு காட்டி, தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை மீறியுள்ளது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தளமான ஜெமினியில் பிரதமர் மோடி, அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோர் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அந்தத் தளம் பிரதமர் மோடி குறித்து கடுமையான கருத்துகளைத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் மற்ற தலைவர்களை பற்றி பிரச்னை எதுவும் ஏற்படாத வகையில் ஜெமினி பதில் அளித்துள்ளது. இதனால் பிரதமர் நரேந்திர மோடி மீது கூகுளின் செயற்கை நுண்ணறிவு தளம் பாகுபாடு காட்டுவதாக சமூக வலைதளப் பயனாளர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதையும் படியுங்கள் : மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் – தலைமை தேர்தல் ஆணையர் 2வது நாளாக இன்றும் ஆலோசனை!
இந்நிலையில், இது தொடர்பாக மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது 'எக்ஸ்' தள பக்கத்தில், “தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள், குற்றவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளை, கூகுளின் ஜெமினி தளம் நேரடியாக மீறியுள்ளது” என்று பதிவிட்டு குற்றம் சாட்டியுள்ளார். இந்தப் பதிவை கூகுள் நிறுவனத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ள அவர், இந்த விவகாரத்தில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.