"இந்தியா - பாக். தாக்குதலை நிறுத்த ஒப்புதல்" - அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக சந்தேகித்த இந்தியா, பாகிஸ்தான் உடனான உறவை இந்தியா முற்றிலுமாக துண்டித்தது. குறிப்பாக, வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.
இதற்கிடையே, கடந்த 7ம்தேதி நள்ளிரவு 1.44 மணியளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. மொத்தம் 9 இடங்களில் (சகாம்ரு, முரித்கி, கோட்லி, சியால்கோட், குல்பூர், பிம்பர், பஹவல்பூர்) பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"இரவு முழுவதும் நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்தியாவும் - பாகிஸ்தானும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்பக்கொண்டன. இரு நாடுகளும் சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சூழ்நிலையை புரிந்து கொண்டு தாக்குதலை கைவிட்ட இரு நாடுகளுக்கும் எனது வாழ்த்துகள்"
இவ்வாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.