“இந்தியா எதிரணிகளை பார்த்து முன்புபோல பயப்படுவதில்லை... காரணம் இதுதான்” - ரிக்கி பாண்டிங்!
இந்தியா எதிரணிகளை கண்டு பயப்படுவதில்லை; அதற்கு ஐபிஎல் போட்டி ஒரு முக்கிய காரணம் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ள 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் மாதம் துவங்குகிறது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2 டெஸ்ட் தொடர்களிலும் இந்தியா வெற்றிப் பெற்றது. தொடர்ந்து இம்முறையும் வென்று, ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. மறுபுறம் ஆஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தும் என்று முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்தியா எதிரணிகளை கண்டு பயப்படுவதில்லை எனவும், அதற்கு ஐபிஎல் போட்டி ஒரு முக்கிய காரணம் எனவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது;
இப்போதெல்லாம் வெளிநாடுகளில் ஆஸ்திரேலியா போன்ற எதிரணிகளை கண்டு இந்தியா பயப்படுவதில்லை. ஐபிஎல் தொடரால் இளம் இந்திய வீரர்கள் அழுத்தமான போட்டிகளை தைரியமாக எதிர்கொள்கின்றனர். ஏனெனில் ஐபிஎல் என்பது அவர்களுக்கு உலகக்கோப்பை போல் இருக்கிறது. இதை நான் கடந்த 10 வருடங்களாக ஐபிஎல் தொடரில் இருப்பதால் சொல்கிறேன்.
இந்தியாவின் பேட்ஸ்மேன்கள் தோல்வியை நினைத்து பயப்படாமல் அதிரடியாக விளையாடுகின்றனர். அவர்களுடைய வேகப்பந்து வீச்சு ஆழமும் சிறப்பாக முன்னேறியுள்ளது. கடந்த 6 – 7 வருடங்களாக இந்தியாவின் தலைமையும் வலுவாகியுள்ளது. விராட் கோலியின் கேப்டன்ஷிப் இந்திய கிரிக்கெட்டை மாற்றியதில் மிகப்பெரிய வேலை செய்துள்ளது. ராகுல் டிராவிட் தலைமையில் கடந்த 4 வருடங்களாக தொடர்ந்தது. ஒரு அணியை சுற்றி விராட் கோலி போன்றவர் இருக்கும் போது செல்வாக்கு நன்றாக இருக்கும். இந்தியாவிடம் தற்போது நட்சத்திர வீரர்களும் உள்ளனர்” என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி தலைமையிலான கேப்டன்ஷியின் போது முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.