இந்தியா கூட்டணியின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி!
இந்தியாவின் துணை குடியரசு தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் உடல் நிலை பிரச்சனை காராணமாக கடந்த ஜூலை 21 தேதி திடீரென பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையமானது துணை குடியரசு தலைவர் பதவி தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது. மேலும் தேர்தல் அட்டவணையையும் கடந்த 7ம் தேதி வெளியிட்டது. அதன்படி புதிய துணை குடியரசு தலைவரை தேர்வு செய்ய செப்டம்பர் 9ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இதனிடையே துணை குடியரசு தலைவர் பதவிக்கு ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக களம் காண்கிறார். இதனை தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாக வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டமானது காங்கிரஸ் கட்சி தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுனா கார்கேவின் இல்லத்தில் நடைபெற்றது. திருச்சி சிவா, இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆகியோரின் பெயர்கள் வேட்பாளர் பட்டியலில் அடிபட்டன.
இதனைத் தொடர்ந்து இன்று இந்தியா கூட்டணி எம்பிக்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அச்சந்திப்பில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக அறிவித்தார்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுதர்ஷன் ரெட்டி 1946 ஜூலை 8ம் தேதி பிறந்தார். 1971ம் ஆண்டு ஆந்திர பிரதேச பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார்.1988-1990 ஆண்டுகளில் ஆந்திர மாநில உயர்நீதி மன்றத்தில் அரசு வழக்கறிஞராகவும், 1990ல் 6 மாதங்கள் மத்திய அரசின் கூடுதல் நிலை ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து ஆந்திர பிரதேசம்,கவுஹாத்தி ஆகிய உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாக பணியாற்றிய அவர் கடந்த 2007 முதல் 2011 வரை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பதவி வகித்துள்ளார்.
மேலும் சுதர்ஷன் ரெட்டி வரும் 21ம் தேதி குடியரசு துணை தலைவர் வேட்பாளருக்கான வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.