கேரளாவில் மோதிக்கொள்ளும் 'INDIA' கூட்டணிக் கட்சிகள்!
கேரளாவில் INDIA கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் நேருக்கு நேர் மோதும் வகையில் வேட்பாளர்களை அறிவித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் இடம்பெற்றுள்ள ‘இந்தியா’ கூட்டணியில் ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சி, தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்டவைகளுடன் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தமது முதலாவது வேட்பாளர்கள் பட்டியலை இன்று (மார்ச் 8) வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக, டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் பத்திரிகையாளர்களைச் சந்தித்து காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, ராகுல் காந்தி மீண்டும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் ஆழப்புழா தொகுதியில் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் போட்டியிடுகிறார். முன்னாள் கேரள முதலமைச்சர் கருணாகரனின் மகன் கே.முரளீதரன், திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் திருவனந்தபுரத்தில் மீண்டும் களம் இறங்குகிறார்.
கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரின் தம்பி டி.கே.சுரேஷ், பெங்களூர் ஊரக தொகுதியில் போட்டியிடவுள்ளார். சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகல் ராஜ்நந்த்கோவன் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். கர்நாடகத்தின் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரின் மனைவி கீதா ராஜ்குமார் ஷிமோகா தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள 39 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலில், 24 வேட்பாளர்கள் OBC, SC & ST பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் 15 பொது வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று 9 மாநிலங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி. விரைவில் அடுத்த கட்ட பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கேரளாவை பொறுத்தவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அங்கு வலுவான கட்டமைப்புடன் உள்ளது. இந்த கட்சிகளுடன் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறது.
இதனால் ராகுல் காந்தி வயநாட்டை கைவிட்டு வேறு தொகுதியில் போட்டியிடுவார் என்ற தகவல்கள் வெளியாகின. ஆனால் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் ராகுல் காந்தியும் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வயநாட்டில் ‛இந்தியா' கூட்டணியின் 2 வேட்பாளர்கள் தங்களுக்குள் களத்தில் நேரடியாக மோதும் சூழல் உருவாகியுள்ளது.
இதேபோல் திருவனந்தபுரம் தொகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பன்னியன் ரவீந்திரனும், காங்கிரஸ் சார்பில் சசி தரூரும் ஒருவரை ஒருவர் எதிர்கொள்கின்றனர். திருச்சூர் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வி.எஸ்.சுனில் குமாரும், காங்கிரஸ் சார்பில் கே.முரளீதரனும் போட்டியிடுகின்றனர். மேலும் மாவேலிக்கரா தொகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அருண்குமாரும், காங்கிரஸ் கட்சி சார்பில் கொடிக்குனில் சுரேஷ்ஷும் போட்டியிடுகின்றனர். இதனால் பாஜகவை எதிர்த்து ஓரணியில் திரண்ட கட்சிகளே தங்களுக்குள் போட்டியிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் தற்போது INDIA கூட்டணியில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.