காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவை சிறையிலிருந்தவாறே தோற்கடித்த சுயேட்சை வேட்பாளர்!
காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் அப்துல் ரஷீத் ஷேக் 1,94,996 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவை வென்றுள்ளார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு அடுத்தடுத்த சுற்றுகளும் எண்ணப்படுகின்றன.
543 மக்களவை தொகுதிகளில் குஜராத் மாநிலம் சூரத் தொகுதி பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வான நிலையில் எஞ்சிய 542 இடங்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் அப்துல் ரஷீத் ஷேக் 1,94,996 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் 4,46,213 வாக்குகள் பெற்றுள்ளார். இத்தொகுதியில் வெற்றிப்பெற்றுள்ள அப்துல் ரஷீத் ஷேக் தற்போது சிறையில் உள்ளார். அவர் சிறையில் இருந்தவாறு இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.