Ind vs Aus | மழையால் ஆட்டம் பாதிப்பு - டிராவில் முடிந்த பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி !
ஆஸ்திரேலியா - இந்தியா இடையே நடைபெற்ற 3 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், மூன்றாவது போட்டி, பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து பேட்டிங்கில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களைக் குவித்தது. இதனைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணி, தொடக்கத்திலேயே திணறியது. கே.எல்.ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் அரை சதங்களால் பாலோ ஆனை இந்திய அணி தவிர்த்தது. இந்த நிலையில் போட்டியின் கடைசி நாளான இன்று, 9 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் என்ற ஸ்கோருடன் இந்திய அணி ஆட்டத்தை தொடர்ந்தது.
எனினும், 31 ரன்களில் ஆகாஷ்தீப் ஆட்டமிழந்தார். இதனால், 260 ரன்களுக்கு இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை முடித்தது. முதல் இன்னிங்ஸில் 185 ரன்களை ஆஸ்திரேலிய அணி கூடுதலாகப் பெற்றது, இருப்பினும் மழையின் காரணமாக ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதன்பின் தொடங்கிய ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் வேகம் காட்டினர். இரண்டாவது இன்னிங்ஸில் மொத்தம் 18 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்களை இழந்தது. இந்த ஆட்டத்தில் 89 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்திருந்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 274 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனை அடுத்து இந்திய அணிக்கு 275 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 8 ரன்கள் எடுத்த போது மழையினால் ஆட்டம் தடைபட்டது. இதன்பின், மழை விடாமல் பெய்ததால் , மோசமான வானிலை காரணமாக ஆட்டத்தை கைவிடுவது என இரு அணிகளும் முடிவு செய்தது. அதனடிப்படையில் இந்திய - ஆஸ்திரேலிய இடையே நடைபெற்ற 3-வது போட்டி டிரா என அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. மேலும் இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது.