பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை உயர்வு!
கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
மளிகைப் பொருட்களின் விலை ஒவ்வொரு மாதமும் உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. கடந்த மாதத்துடன் மளிகைப் பொருட்களின் விலையை ஒப்பிட்டு பார்க்கும்போது பருப்பு, மசாலா, உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது.
இதையும் படியுங்கள் : கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்றார் ஈரோட்டை சேர்ந்த ரியா..!
அதன்படி, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, சுண்டல், பட்டாணி மற்றும், மசாலா வகைகளில் மஞ்சள், மிளகாய், மல்லித்தூள் விலை கடந்த மாதத்தை விட கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்ந்து இருக்கிறது. இதுதவிர, மிளகு, கடுகு, சீரகம், சோம்பு, வெந்தயம், மிளகாய், மல்லி ஆகியவற்றின் விலையும் கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.50 வரை அதிகரித்து உள்ளது.
இதையடுத்து, கடந்த மாதம் ரூ.40-க்கு விற்கப்பட்ட சர்க்கரை, இந்த மாதம் ரூ.48-க்கு விற்பனை ஆகிறது. எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது. தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பாமாயில் வகைகள் லிட்டருக்கு ரூ.12 முதல் ரூ.30 வரை அதிகரித்து இருக்கிறது. 'ரீபண்டாயில்' எண்ணெயும் உயர்ந்துள்ளது.
இது மட்டுமல்லாமல், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்ட பூண்டு விலை கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து கிடுகிடுவென உயர்ந்து, ஒரு கிலோ ரூ.450 முதல் ரூ.500 வரை விற்பனையானது. அதன் பின்னர் விலை குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு வரை ரூ.180 வரை விற்பனை ஆன பூண்டு, நேற்று ஒரு கிலோ ரூ.210 வரை விற்பனையாகிறது.
மேற்சொன்ன பொருட்கள் சார்ந்த விளைச்சல், உற்பத்தி குறைவு,வண்டி வாடகை,ஆட்கள் கூலி அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் மளிகை மற்றும் எண்ணெய் பொருட்கள், பூண்டு விலை உயர்ந்து வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.