மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு!
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து உள்ளதை தொடர்ந்து, காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ் அணைகளின் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கர்நாடக அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, நேற்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 6,548 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 20,505 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணை நடப்பாண்டில் 2வது முறையாக நிரம்பியுள்ளது. தொடர்ந்து, மேட்டூர் அணையில் இருந்து எந்நேரமும் உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக காவிரி கரையோரம் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆற்றில் இறங்கவும், குளிக்கவும், துணி துவைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வருவாய்த்துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் தங்களது கால்நடைகள் மற்றும் வீட்டு வளர்ப்பு பிராணிகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.