'இன்று வருமான வரி தினம்' - இந்தியாவில் அறிமுகமானது எப்படி தெரியுமா?
வருமான வரி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1860 ஆம் ஆண்டு ஜூலை 24ம் தேதி வருமான வரி அறிமுகப்படுத்தப்பட்டதை குறிக்கும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.
1857ல் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக இந்திய வீரர்கள் போராட்டத்தை தொடங்கினர். இது பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான முதல் போராட்டமாக கருதப்படுகிறது. இந்த போராட்டத்தை கட்டுபடுத்துவதற்கான ஆங்கிலேயரின் ராணுவச் செலவுகள் அதிகரித்தன. 1856 -57 இல், ஆங்கிலேயர்கள் தங்கள் ராணுவத்திற்காக 12 கோடியே 25 லட்ச ரூபாய் செலவழித்தனர். 1857 ம் ஆண்டின் போராட்டத்திற்குப் பிறகு, இந்த செலவினம் 1857-58 இல் 22 கோடியே 64 லட்ச ரூபாயாக உயர்ந்தது. இது ஏறக்குறைய இரட்டிப்பாகியது. இதன் விளைவாக பிரிட்டனுக்கு கணிசமான கடன் ஏற்பட்டது.
இந்த நிதி சிக்கல்களைத் தீர்க்கும் பொறுப்பு தி எகனாமிஸ்ட் இதழின் நிறுவனர் ஜேம்ஸ் வில்சனுக்கு வழங்கப்பட்டது. வில்சன் இந்தியாவில் உள்ள வைஸ்ராய் லார்ட் கேனிங் கவுன்சிலின் நிதி உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பிப்ரவரி 18, 1860 இல், அவர் இந்தியாவில் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார், மூன்று வகையான வரிகளை அறிமுகப்படுத்தினார். அவை வருமான வரி, உரிம வரி மற்றும் புகையிலை வரி.
1946 இல், இந்தியா தனது முதல் வருமான வரி அதிகாரிகளுக்கான ஆட்சேர்ப்புத் தேர்வை நடத்தியது. இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, 1953 இல், இந்த அமைப்பு 'இந்திய வருவாய் சேவை' (IRS) என்று பெயரிடப்பட்டது. தற்போது நாட்டில் வருமான வரிச் சட்டம் நடைமுறையில் உள்ளது. அதில் அவ்வப்போது திருத்தங்கள் செய்யப்படுகின்றன.