"தமிழ் சினிமாவில் ஹேமா கமிட்டி போன்ற அமைப்பு இதுவரை தேவைப்படவில்லை.." - நடிகை #IswaryaRajesh பேட்டி!
தமிழ் சினிமாவில் ஹேமா கமிட்டி இதுவரை தேவைப்படவில்லை எனவும், தமிழ் சினிமா நன்றாக உள்ளது எனவும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
சார்ஜ்பி என்ற தனியார் நிறுவனம் வருகின்ற அக். 27-ம் தேதி மாரத்தான் நிகழ்ச்சி நடத்த உள்ளது. அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாரத்தான் நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ டி-ஷர்ட்டை நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவி பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா வெளியிட்டு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்றுக்கொண்டார்.
சென்னை ரன்ஸ் மாரத்தான் நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டிலுள்ள தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கான கல்வி வசதிகள் மற்றும் வளங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த உள்ளது. மரத்தான் மூலம் திரட்டப்படும் நிதி, புதிய வகுப்பறைகள் கட்டுதல் மற்றும் மாணவர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை வழங்குதல் உள்ளிட்ட அரசுப் பள்ளிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுக்கு பயன்படுத்தப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி மாரத்தான் நிகழ்ச்சி பல்வேறு பிரிவுகளில் 11,000 பங்கேற்பாளர்களுக்கு இடமளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : “இந்திய அணி பல திறமையான வீரர்களைக் கொண்டுள்ளது” – பந்துவீச்சு பயிற்சியாளர் #MorneMorkel பெருமிதம்!
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது :
"எல்லோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும். அரசு பள்ளியில் பல புதிய திட்டங்கள் வருகிறது. இதே போன்று பல திட்டங்கள் அரசு கொண்டுவர வேண்டும். அரசு பள்ளியின் தனித்துவத்தை மக்களுக்கு அரசு எடுத்து செல்ல வேண்டும். தமிழ் திரையுலகில் ஹேமா கமிட்டி குறிப்பிட்டது போன்ற சம்பவங்கள் நடந்ததில்லை.
நானும் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளேன். எனக்கு அதுபோன்ற பாலியல் துன்புறுத்தல்கள் எதுவும் நடந்ததில்லை. இது எதுவும் நடக்கக் கூடாது
என்பது தான் நம் விருப்பம். தமிழ் சினிமாவில் ஹேமா கமிட்டி இதுவரை தேவைப்படவில்லை.
தமிழ் சினிமா நன்றாக தான் உள்ளது. தமிழ் திரை உலகில் பாலியல் ரீதியான சம்பவங்கள் ஏதேனும் நடந்தால் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.