பீகாரில் அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவம் | விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!
பீகார் மாநிலத்தில் தொடர்ந்து பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவங்கள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி பீகார் அரசுக்கும், தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் பாலங்கள் இடிந்து விழும் சம்பவம் அதிக அளவில் நடந்து வந்த நிலையில், பிரதீஸ் சிங்க் என்பவர் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அவர், பீகாரில் பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் குறித்து நாளிதழ்களில் வெளியான செய்திகளை அடிப்படையாக வைத்து, அனைத்து பாலங்களையும் ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.
இருக்கும் பாலங்களின் உறுதித் தன்மையை தொடர்ந்து கண்காணிக்கும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும் உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்திருந்தார். பீகார் போன்ற வெள்ளம் அதிகம் பாதிக்கும் மாநிலங்களில், பாலங்கள் இடிந்து விழும் சம்பவம் பெரும் கவலைக்குரியது என்றும் பீகாரின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் 73 சதவீதம் பகுதி வெள்ள அபாயப் பகுதியாக உள்ளது என்றும் அவர் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, பீகார் அரசும், தேசிய நெடுஞ்சாலைத் துறையும் பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவங்கள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.