காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழை - ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 65000 கன அடியாக அதிகரிப்பு!
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 65000 கன அடியாக அதிகரித்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 65000 அடியாக அதிகரித்துள்ளது.
இன்று மாலை வினாடிக்கு 56,000 கனடியாக இருந்த நீர்வரத்து தற்போது வினாடிக்கு 65000 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருவதால் மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.
தண்ணீர் வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. அதேபோல் மெயில் அருவிக்கு செல்லும் நடைபாதையில் சுமார் 2 அடிக்கு மேல் தண்ணீர் செல்வதால் யாரும் உள்ளே செல்லாதவாறு நுழைவு வாயில் கயிறு கட்டி காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர்ந்து 6 வது நாளாக ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பரிசல் இயக்கவும் நீர்வீழ்ச்சி மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்கவும் மாவட்ட ஆட்சியர் சாந்தி தடை விதித்துள்ளார்.