அமெரிக்காவில் கப்பல் மோதி பால்டிமோர் பாலம் உடைந்து விபத்து | இந்திய தூதரக உதவி எண் அறிவிப்பு!
அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதி பாலம் உடைந்து விபத்துக்குள்ளானதில், பாதிக்கப்பட்ட அல்லது உதவி தேவைப்படக்கூடிய இந்தியர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்ணை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணம் பால்டிமோர் நகரில் படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே 'பிரான்சிஸ் ஸ்காட் கீ' என்ற மிகப்பெரிய பாலம் உள்ளது. 2 கி.மீ தூரத்துக்கு 4 வழி பாதையாக அமைந்துள்ள இந்த பாலம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தை கடக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக பாலத்தின் மீது சரக்கு கப்பல் ஒன்று மோதியது. இதனால் பாலத்தின் பெரும் பகுதி உடைந்து ஆற்றில் விழுந்தது.
அப்போது பாலத்தில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் ஆற்றில் விழுந்தன. கப்பலில் 22 இந்திய மாலுமிகள் இருந்ததாக தகவல் வெளியானது. மேலும் விபத்து நடந்த சமயத்தில் பாலத்தின் ஒரு பகுதியில் பழுது நீக்கும் பணிகள் நடந்து கொண்டிருந்ததாகவும், பணியில் ஈடுபட்டிருந்த சில தொழிலாளர்கள் ஆற்றில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது. விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மீட்பு குழுக்கள் உடனடியாக அங்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 22 பேரும் காயங்கள் எதுவும் இன்றி உயிர் தப்பியதாகவும், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட அல்லது உதவி தேவைப்படக்கூடிய இந்தியர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்ணை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில், “பால்டிமோர் நகரில் உள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் இதயப்பூர்வமான இரங்கல்கள். உதவி தேவைப்படும் இந்திய குடிமக்களுக்கு, இந்திய தூதரகம் ஒரு பிரத்யேக ஹாட்லைனை உருவாக்கியுள்ளது. தயவுசெய்து எங்களை 1-202-717-1996 இல் தொடர்பு கொள்ளவும். இந்த எண்ணுக்கு வழக்கமான வினவல்கள்/ கோரிக்கைகளை அனுப்புவதை தயவுசெய்து தவிர்க்கவும்” இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது.