தமிழ்நாட்டில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி!
தமிழ்நாட்டில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என்று தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12-ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. பட்டாசுகள் வெடிக்க கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. சுற்றுசூழல் மாசு ஏற்படுவதால் அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் தீபாவளி நாளில் இந்த ஆண்டும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவுப் படி தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியன்று காற்றின் தரம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.