கோத்தகிரி குடியிருப்புப் பகுதியில் கருஞ்சிறுத்தை - பொதுமக்கள் பீதி
கோத்தகிரி நகரின், பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் அதிகாலை நேரத்தில் கருஞ்சிறுத்தை நடமாடும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே வனப்பகுதிகளில் நிலவி வரும் வறட்சியாலும், உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையாலும் யானை, மான், காட்டுமாடு, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன. இந்த நிலையில், பல பகுதிகளில் கருஞ்சிறுத்தையின் நடமாட்டம் தொடர்கிறது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கருஞ்சிறுத்தையின் நடமாட்டம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் சமீப காலமாக பல்வேறு வன விலங்குகள் உலவி வருகின்றன. இந்நிலையில், அதிகாலை நேரத்தில் கருஞ்சிறுத்தை அப்பகுதியில் நடமாடி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.