அரக்கோணம் அருகே 4 மாத குழந்தைக்கு தவறான தடுப்பூசி போடப்பட்டதாக குற்றச்சாட்டு!
அரக்கோணம் அருகே 4 மாத ஆண் குழந்தைக்கு தவறான தடுப்பூசி போட்டதால் வலிப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக எம்எல்ஏ ரவி தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பெருமூச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ரவி இன்று ஆய்வு செய்தார். அப்போது பெருமூச்சி கிராமத்தை
சேர்ந்த சுஜாதா - பார்த்திபன் தம்பதியருக்கு பிறந்த 4 மாத ஆண் குழந்தைக்கு பெருமூச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று தடுப்பூசி போடப்பட்டது. இந்த தடுப்பூசியால் குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் தெரிவித்தனர்.
அதைதொடர்ந்து சம்பந்தப்பட்ட பெற்றோரிடம் எம். எல். ஏ ரவி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அப்போது அவர்கள் தடுப்பூசியால் தான் குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டதாக தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
இதையும் படியுங்கள்: தொடரும் கனமழை | புதுக்கோட்டையில் தீவிரமடையும் காய்ச்சல் பாதிப்பு…
அப்போது அவர் கூறியதாவது: இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் தவறான தடுப்பூசியால் 4 மாத ஆண் குழந்தை வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் .
இங்கு 2 டாக்டர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில் ஒரு டாக்டர் மட்டுமே உள்ளார். 5 நர்ஸ்கள் இருக்க வேண்டிய இடத்தில் 3 பேர் மட்டுமே உள்ளனர்.
இரவில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுவதில்லை. லேப் டெக்னீசியன், இசிஜி
இல்லை. தினமும் 75 வெளி நோயாளிகள் இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர். அவர்களுக்கு மருத்துவ வசதி சரியான முறையில் தருவதில்லை. கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் வசதியும் இல்லை. குறிப்பாக இங்கு எந்த ஒரு உபகரணங்களும் இல்லை, என்று எம்எல்ஏ ரவி குற்றம் சாட்டினார்.