மழை வெள்ள பாதிப்பு: நெல்லையில் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு!
நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக திருச்செந்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் கனமழை வெள்ளத்தால் ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன.
இந்த நிலையில் நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். மத்திய குழுவினர் இரு குழுக்களாக பிரிந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து தாமிரபரணி ஆற்றுப்பகுதி, களக்காடு, தச்சநல்லூர், நொச்சிக்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: கனமழையின் போது நெல்லை களக்காடு சுற்றுவட்டார கிராமங்களில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து நாசம்!
தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு ஆலோசகர் கர்னல் கே.பி.சிங் தலைமையிலான 6 பேர் கொண்ட மத்திய குழுவினர் தூத்துக்குடியில் நேற்று (டிச.20) வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தனர். மத்திய குழுவினர் முதற்கட்டமாக வெள்ள பாதிப்புகள் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் கேட்டறிந்தனர்.
பின்னர் 3 குழுக்களாக பிரிந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தனர். இந்த நிலையில், இன்று (டிச.21) நெல்லை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.