"உங்களை இந்திய ஜெர்சியில் காண காத்திருக்கிறேன்" - சாய் சுதர்சனை பாராட்டிய சிவகார்த்திகேயன்!
ஐபிஎல் தொடரின் 18வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா – குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டிக்கான டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானே பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலிங் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் குஜராத் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், 39 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி குஐராத் அணி அபார வெற்றி பெற்றது. குஜராத் அணியின் வெற்றிக்கு சாய் சுதர்சனும் (52 ரன்கள்), சுப்மன் கில்லும் (90 ரன்கள்) அணிக்கு உறுதுணையாக இருந்தனர்.
இந்தப் போட்டியில் அடித்த ரன்களையும் சேர்த்து தமிழ்நாட்டு வீரர் சாய் சுதர்சன் இதுவரை குஜராத்துக்காக 8 போட்டிகளில் 417 ரன்கள் குவித்துள்ளார். இதன் வாயிலாக 2025 ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் நிக்கோலஸ் பூரானை முந்திய அவர் முதலிடம் பிடித்து ஆரஞ்சு தொப்பியை தனதாக்கியுள்ளார். 2வது இடத்தில் பூரான் 368 ரன்களுடன் உள்ளார்.
இந்j நிலையில், தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடலில் குஜராத் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் சாய் சுதர்சனின் ஆட்டத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டி இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சாய் சுதர்சன், நீங்கள் விளையாடும் விதம் மிகவும் பிடித்திருக்கிறது. அதை அப்படியே தொடருங்கள். இந்திய ஜெர்சியில் உங்களை காண காத்திருக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார். சாய் சுதர்சன் ஏற்கனவே இந்திய அணிக்காக 1 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.