"நலமுடன் இருக்கிறேன்... தவறான தகவல்களைப் பரப்பாதீர்" - தொழிலதிபர் #RatanTata
உடல்நிலை குறித்து வெளியான தகவலுக்கு பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மறுப்பு தெரிவித்துள்ளார்.
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. 86 வயதான ரத்தன் டாடா, நள்ளிரவு 12.30 மணியளவில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் பரவின. குறிப்பாக ரத்த அழுத்தக் குறைவு காரணமாக, அவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், அதற்கு ரத்தன் டாடாவே மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“எனது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வருவதை நான் அறிவேன். மேலும் அந்தச் செய்திகள் உண்மைத்தன்மை அற்றவை என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். எனது வயது மற்றும் உடல்நிலை சார்ந்து வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனைக்குச் சென்றுள்ளேன். கவலைப்படும்படி எவ்வித பிரச்னையும் இல்லை. நான் நலமுடன் இருக்கிறேன், மக்களும், ஊடகங்களும் தவறான தகவல்களைப் பரப்புவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.”
இவ்வாறு பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பையை தளமாகக் கொண்ட டாடா குழுமத்தின் தலைவராக 1991-2012 மற்றும் 2016-17 பதவி வகித்தார். டிசம்பர் 2012 இல் டாடா குழுமத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து டாடா ஓய்வு பெற்றார். அவருக்கு பின்பு டாடா குழுமத்தின் தலைவராக பதவியேற்ற சைரஸ் மிஸ்திரி பல பிரச்சனைகளுக்கு பின்பு வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அக்டோபர் 2016 முதல் இடைக்காலத் தலைவராக சிறிதுகாலம் பணியாற்றினார். டாடா குழுமத்தின் தலைவராக நடராஜன் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டபோது ரத்தன் டாடா ஜனவரி 2017 இல் ஓய்வு பெற்றார்.