"நான் சென்னை பெண் தான்..." | தீபாவளி போனஸ் திரைப்பட விழாவில் நடிகை #Riythvika பேச்சு!
நான் சென்னை பெண் தான் என ‘தீபாவளி போனஸ்’ திரைப்பட விழாவில் நடிகை ரித்விகா தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் ஜெயபால்.ஜெ இயக்கத்தில், விக்ராந்த் நடித்த திரைப்படம் ‘தீபாவளி போனஸ்’. இத்திரைப் படத்தில் ரித்விகா கதாநாயகியாக நடித்துள்ளார். ஸ்ரீ அங்காளி பரமேஸ்வரி புரொடக்ஷன்ஸ் சார்பில் தீபக் குமார் டாலா இப்படத்தை தயாரித்துள்ளார்.
எளிய மக்களின் வாழ்க்கை போராட்டங்களை குறிப்பாக தீபாவளி போன்ற பெரும் பண்டிகை காலங்களை கொண்டாடுவதற்காக அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களை எடுத்துக் கூறும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் நாளை (அக்.25) திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்திற்கு மரிய ஜெரால்ட் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்த நிலையில், ‘தீபாவளி போனஸ்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது நடிகை ரித்விகா பேசியதாவது:
“என்னைப் பற்றி தொகுப்பாளி நன்றாக அறிமுகம் கொடுத்தார். ஆனால் அவர் சொன்னது போல் என் சொந்த ஊர் சேலம் இல்லை, சென்னை. நான் சென்னை பெண் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் ஜெயபால் இந்த படத்திற்காக என்னை தொலைபேசியில் தான் முதலில் தொடர்பு கொண்டார். அப்போது ஒரு ஒன்லைன் சொன்னார். அதை கேட்டதும் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இந்த படத்தின் கதையை கேட்கும் போது இது நன்றாக இருக்கும் என்று என் உள்ளுணர்வு சொன்னது.
அதுபோலவே, படம் சிறப்பாக வந்துள்ளது. படத்தின் தலைப்பும் ஈர்க்கும் விதமாக இருக்கிறது. இப்படத்தில் நடித்தவர்களை தவிர மற்ற அனைவரும் புதியவர்கள். இயக்குநர், தயாரிப்பாளர், உதவி இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் என அனைவரும் புதியவர்களாக இருந்தனர். என்னிடம் 22 நாட்கள் கேட்டார்கள், ஆனால் என்னுடைய பகுதியை 19 நாட்களில் முடித்து விட்டார்கள். சில தடுமாற்றங்கள் இருந்தாலும், திட்டமிட்டபடி ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பை முடித்ததோடு, பின்னணி வேலைகளையும் சரியாக திட்டமிட்டு செய்து முடித்தார்கள். தவறு செய்தாலும் அதை சரி செய்துக்கொண்டு, என்னையும் சமாதானப்படுத்தி அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்து முடித்ததற்காக அவர்களுக்கு நன்றி.
இந்த படத்தின் தலைப்பை நடிகர் வடிவேலு வெளியிட்டார். இதில் நாயகனாக நடித்த விக்ராந்த் நல்ல நடிகர். அவரால் இன்று இங்கு வர முடியவில்லை. அவருக்கு இன்னும் நல்ல வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். எனது மகனாக நடித்த சிறுவன் ஹரிஷ் சிறப்பாக நடித்தார். எனக்கும், விக்ராந்துக்கும் அடுத்து என்ன வசனம், என்ன காட்சி என்று தெரியாது. ஆனால் சிறுவன் ஹரிசுக்கு அனைத்தும் தெரியும். அந்த அளவுக்கு அவனுக்கு பயிற்சி கொடுத்திருந்தார்கள்.
படத்தில் சிறு சிறு வேடத்தில் நடித்தவர்களுக்கு கூட இயக்குநர் பயிற்சி கொடுத்திருந்தார். என் வாழ்க்கையில் நான் தீபாவளி போனஸ் வாங்கியதே இல்லை. உங்களுக்கே தெரியும் சினிமாவில் யாருக்கும் போனஸ் என்பது இல்லை. நான் படிப்பு முடிந்ததும் சினிமாவுக்குள் வந்துவிட்டேன். அதனால் நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் போனஸ் வாங்கும் வாய்ப்பும் அமையவில்லை. ஆனால், இந்த 2024 ஆம் ஆண்டு எனக்கு தீபாவளி போனஸ் கிடைத்திருக்கிறது.”
இவ்வாறு நடிகை ரித்விகா தெரிவித்தார்.