சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: மருந்துக்கடையில் அதிரடி சோதனை!
சென்னை மாதவரத்தில் உள்ள மருந்து கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர சோனை மேற்கொண்டனர்.
சென்னை மாதவரம் பகுதிக்கு உட்பட்ட கேகேஆர் கார்டன் ஒன்றாவது தெருவில் முத்தையா என்பவருக்கு சொந்தமான 'லைப் வேக்சின் ஸ்டோர்' என்ற மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை மருந்து கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இவரது மருந்து கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால்கள் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலை அடுத்து சம்பந்தப்பட்ட மருந்து கடையில் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து வந்திருந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் சுமார் 50க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் தாய்ப்பால்கள் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த பாட்டில்களை பறிமுதல் செய்த திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளர் முத்தையாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இந்த தாய்ப்பால்கள் இவருக்கு எங்கிருந்து, எப்படி கிடைத்தது? இதனை எப்படி இவர் பதப்படுத்தி விற்பனையில் ஈடுபட்டு வந்தார் என்பது குறித்து எல்லாம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சம்பந்தப்பட்ட மருந்துக் கடை தற்காலியமாக மூடப்பட்டுள்ளது. அங்கு கைப்பற்றப்பட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட பாட்டில்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனைக்காக அரசு ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.