சட்டவிரோத பணப் பரிவர்த்தனை - கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்க்கு சொந்தமான ரூ.73 லட்சம் சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை!
கேரளாவில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சொந்தமான ரூ.73 லட்சம் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கட்டுப்பாட்டில் உள்ள கருவன்னூர் வேளாண் கூட்டுறவு வங்கியில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சூர் மாவட்ட குழுத் தலைவர்கள் உத்தரவின்படி கூட்டுறவு வங்கியில் நிதி முறைகேடு நடைபெற்றதாக நீதித்துறை மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்தனர்.
அவர்களின் வாக்குமூலத்தை ஆதாரமாக கொண்டு விசாரணை மேற்கொண்டு வரும் அமலாக்கத் துறை, இந்த வழக்கு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சொந்தமாக திருச்சூரில் உள்ள ரூ.10 லட்சம் மதிப்பிலான நிலம், அக்கட்சியின் மறைக்கப்பட்ட 5 வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ.63.62 லட்சம் வைப்புத்தொகை ஆகியவற்றை முடக்கியுள்ளது.
இதுதொடர்பாக அமலாக்கத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சூர் மாவட்ட குழு உத்தரவின்பேரில் கூட்டுறவு வங்கியில் பலருக்கு சட்டவிரோதமாக கடன் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு கைம்மாறாக அவர்களிடம் நன்கொடை உள்ளிட்ட வடிவில் அந்தக் குழு பணம் வசூலித்துள்ளது. அந்தப் பணம் அதே கூட்டுறவு வங்கியில் சட்டவிரோதமாக திறக்கப்பட்ட மற்றும் மறைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பணம் மூலம், புதிதாக கட்சி அலுவலகம் கட்ட ரூ.10 லட்சம் மதிப்புகொண்ட நிலத்தை அக்கட்சியின் திருச்சூர் மாவட்ட குழுச் செயலாளர் வாங்கியுள்ளார். அந்த நிலம் தற்போது முடக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்த வழக்கு அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.