“வேலையை விட்டுவிட்டு வீட்டுக்கு வந்துவிடுகிறேன்”... தந்தைக்கு உறுதியளித்து விட்டு சென்ற விமானி விபத்தில் உயிரிழந்த சோகம்!
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து நேற்று லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் பயணிகள் விமானம், புறப்பட்ட 3 நிமிடங்களிலேயே 15 கி.மீ தூரத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானிகள் 2 பேர், 10 விமான பணியாளர்கள் உட்பட 242 பேர் இந்த விபத்தில் சிக்கினர். இதில் ஒரு பயணியை தவிர 241 பேரும் உயிரிழந்தனர்.
மேலும் விமானம் பிஜே மருத்துவ விடுதியின் மீது மோதியதில் விடுதியில் இருந்த சிலரும் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 265ஆக அதிகரித்தது. பல கனவுகளுடன் பயணம் மேற்கொண்டவர்களின் உயிர் எதிர்பாரதாவிதமாக விபத்தில் சிக்கி பிரிந்தது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் விவரங்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் கேப்டன் சுமீத் சபர்வால் தனது தந்தையிடம் பேசியது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்துக்கு மூன்று நாட்கள் முன்புதான், தனது தந்தையை பார்த்துக் கொள்வதற்காக விமானப் பணியிலிருந்து விலக விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தனது தந்தை புஷ்கராஜிடம் தான் பணியை ராஜினாமா செய்துவிட்டு வருவதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய மூத்த விமானி சுமீத் சபர்வாலின் குடும்ப நண்பர் லாண்டே,
“சுமித் மூன்று நாட்களுக்கு முன்புதான் தந்தையிடம் பேசி, விமானப் பயணத்தை விட்டுவிட்டு வீட்டிற்கு வந்து அவரைப் பராமரிக்க விரும்புவதாகக் கூறினார். ஆனால் அதற்குள் இந்த துயர சம்பவம் நடந்துவிட்டது. அவரது தந்தையால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. அவரது கண்கள் கண்ணீரால் நிறைந்திருந்தன” என தெரிவித்தார்.
56 வயதான கேப்டன் சபர்வால், அனுபவம் வாய்ந்த விமானி ஆவார். அவர் தனது தந்தையுடன் மும்பையின் பவாய் பகுதியில் வசித்து வந்தார். அவரது தந்தை புஷ்கராஜ், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தில் (DGCA) பணியாற்றியவர்.