யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் ‘இஃப்தார் நோன்பு’!
யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இஃப்தார் என்றால் நோன்பு துறப்பு என்று பொருளாகும். இஸ்லாமியர்கள் அதிகாலை முதல் மாலை வரை 13 மணி நேரத்திற்கு மேல் தண்ணீர் கூட அருந்தாமல் முழுமையாக நோன்பு இருப்பர். இதே போன்று ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பவர்கள் நோன்பு திறக்கும் போது உணவு உண்பதை தான் இஃப்தார் என்று கூறப்படுகிறது. அந்த நேரத்தில் இறைவனிடம் பிரார்த்தனை செய்தால் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதையும் அறிந்து அதை சிறப்பாக செய்கின்றனர்.
அதே போன்று நோன்பு வைத்த ஒருவருக்கு இன்னொருவர் நோன்பு திறக்கும் இஃப்தார் உணவு கொடுத்தால் அவருக்கும் பல நன்மைகள் இருக்கிறது என இஸ்லாம் சொல்கிறது. அதனடிப்படையில் நோன்பு திறப்பவர்களுக்கு பலரும் உணவு அளித்து இஃப்தார் விருந்தினை செய்கின்றனர். சக நண்பர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் அரசுகள் தன் பிரதிநிதிகளாக இருக்கும் முஸ்லிம்களையும் அழைத்து இஃப்தார் எனும் பொது விருந்து கொடுத்து சிறப்பிக்கின்றன.
இது 30 நாட்களும் உலகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும், இஸ்லாமியர்- மற்றும் அவர்களின் இஸ்லாம் அல்லாத நண்பர்களாலும் இஃப்தார் அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், இஃப்தார் நோன்பிற்கான சமூக கலாச்சார பாரம்பரியத்திற்கான விண்ணப்பத்தை ஈரான், துருக்கி, அஜர்பைஜான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் கூட்டாக ஐ.நா கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பிற்கு சமர்ப்பித்தன.
இதனை பரிசீலித்த ஐநா கலாச்சார நிறுவனம் இஃப்தார் நோன்பை அதிகாரப்பூர்வமாக கலாச்சார பாரம்பரிய பட்டியலில் சேர்த்து அங்கீகரித்துள்ளது.