"உலக வரைபடத்தில் நீடிக்க விரும்பினால்.." - பாகிஸ்தானை எச்சரித்த இந்திய ராணுவ தலைமை தளபதி!
ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பின்னணியில் பாகிஸ்தானைச் சேர்ந்த, பயங்கரவாத அமைப்புக்கு உள்ளதாக இந்தியா சந்தேகித்தது. இதற்கு பதிலடியாக, 2 வாரங்களுக்கு பிறகு 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாதிகளின் இடங்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதனையடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவானது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன. இந்த நிலையில், ராஜஸ்தானின் அனூப்கார் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திரா திவிவேதி கூறியதாவது, "பாகிஸ்தான் பயங்கரவாத ஏற்றுமதியை நிறுத்த வேண்டும். அப்படி இல்லையென்றால், ஆபரேசன் சிந்தூர் 2-ம் பாகம் வெகு தொலைவில் இல்லை. இந்த முறை இந்திய படைகள் எந்த கட்டுப்பாட்டுடனும் நடந்து கொள்ளாது. பாகிஸ்தான் உலக வரைபடத்தில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று விரும்பினால், பயங்கரவாத ஊக்குவிப்பை நிறுத்த வேண்டும். கடவுளின் விருப்பம் இருந்தது என்றால், உங்களுக்கு ஒரு சந்தரப்பம் விரைவில் வரும்"
இவ்வாறு இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திரா திவிவேதி தெரிவித்தார்.