“உலகின் எந்த மூலையில் இருந்தாலும் வேட்டையாடப்படுவீர்கள்” - FBI புதிய இயக்குநர் காஷ் படேல்!
FBI-ன் இயக்குநராக காஷ் படேலை நியமிக்க அமெரிக்காவின் செனட் அவையில் நேற்றிரவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற பின்னர், காஷ் படேலை அவர் இந்த பொறுப்பில் நியமித்தார். இதற்கு முக்கிய காரணம் 2016ல் காஷ் படேல் செய்த வேலைதான். 2016ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது. இதனை படேல் கண்டுபிடித்தார். படேலின் குற்றச்சாட்டை CIA, FBI மற்றும் NSA ஆகியவை உறுதி செய்தன.
இந்த தேர்தலில் டிரம்ப்புக்கு ஆதரவாகத்தான் ரஷ்யா வேலை செய்தது. இருந்தாலும், உள்நாட்டு விவகாரங்களில் ரஷ்யா தலையிடுவதை டிரம்ப் விரும்பவில்லை. எனவே படேல் செய்த செயலுக்கு பரிசாக அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்றிரவு செனட் வாக்கெடுப்பு நடந்தது. அதில், படேலுக்கு ஆதரவாக 51 ஓட்டுகளும், எதிர்ப்பாக 49 வாக்குகளும் விழுந்தன. இறுதியாக பெரும்பான்மை அடிப்படையில் படேல் இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இயக்குநரான பின்னர் அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் தன்னை இயக்குநராக்கிய டிரம்ப்புக்கு நன்றி சொன்ன படேல், அமெரிக்காவுக்கு தீங்கு விளைவிப்பவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்கள் வேட்டையாடப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷனின் 9வது இயக்குநராக நியமிக்கப்பட்டதில் நான் பெருமைப்படுகிறேன். அதிபர் டிரம்ப் மற்றும் அட்டர்னி ஜெனரலின் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் ஆதரவிற்காக நன்றி. "ஜி-மென்" முதல் 9/11 தாக்குதலுக்குப் பிறகு நமது நாட்டைப் பாதுகாப்பது வரை FBI ஒரு வரலாற்று பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. அமெரிக்க மக்கள் வெளிப்படையான, பொறுப்புணர்வுள்ள மற்றும் நீதிக்கு உறுதியளிக்கும் ஒரு FBI-க்கு தகுதியானவர்கள். நமது நீதி அமைப்பின் அரசியல்மயமாக்கல் பொதுமக்களின் நம்பிக்கையை அரித்துவிட்டது - ஆனால் அது இன்றுடன் முடிவடைகிறது.
இயக்குநராக எனது பணி தெளிவாக உள்ளது: நல்ல போலீசார் போலீசாராக இருக்கட்டும் - FBI மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவோம். பீரோவின் அர்ப்பணிப்புள்ள ஆண்கள் மற்றும் பெண்களுடன் மற்றும் எங்கள் கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றி, அமெரிக்க மக்கள் பெருமைப்படக்கூடிய ஒரு FBI-ஐ மீண்டும் கட்டியெழுப்புவோம்.
அமெரிக்கர்களுக்கு தீங்கு விளைவிக்க முயல்பவர்களுக்கு - இதை உங்கள் எச்சரிக்கையாகக் கருதுங்கள். இந்த கிரகத்தின் ஒவ்வொரு மூலையிலும் நாங்கள் உங்களை வேட்டையாடுவோம்.”
இவ்வாறு பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.