“அடுக்குமொழியில் பேசினால் சினிமாக்காரர்கள் பின்னாடி சென்று விடுகிறீர்கள்” - விஜய்யை மறைமுகமாக விமர்சித்த அன்புமணி ராமதாஸ்!
10:11 PM May 11, 2025 IST
|
Web Editor
Advertisement
பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் நடைப்பெற்றது. விழாவின் தொடக்கத்தில் வன்னியர் சங்கக் கொடியை பாமக நிறுவனர் ராமதாஸ் ஏற்றி வைத்தார். அப்போது, மாநாட்டில் பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. விழாவில் பேசிய அன்புமணி ராமதாஸ்,
“காடுவெட்டி குரு இந்த மாநாட்டில் இல்லை என்பதுதான் எனக்கு மிகப் பெரிய வருத்தம். நாம் நெருப்பில் வந்தவர்கள்; இந்தியாவில் நம்முடைய சமூகத்திற்கு மட்டும்தான் வரலாற்று புராணம் உள்ளது. தமிழகத்தில் இதுபோன்ற மாநாட்டை எந்த கட்சியும் நடத்தியது இல்லை. தந்தை பெரியாரின் உண்மையான வாரிசு ஆனைமுத்துதான். மண்டல் கமிஷனை வரவைத்தவர் அவர்தான். நம்முடைய முன்னோர்களுடைய பெருமை நமக்கு தெரியவில்லை; தேர்தலுக்காக, அரசியலுக்காக நாம் கூடவில்லை, நாம் உரிமைக்காகக் கூடி உள்ளோம்.
எம்.பி.சி-யில் வழங்கப்படும் 20 சதவீதத்தில் வன்னியர்கள் 12 சதவீதத்திற்கு மேல் எடுத்துக் கொள்வதாக தமிழக அரசு பொய் சொல்லி வருகிறது. ஆனால் அரசு பணியில் உள்ள உயர் அதிகாரிகளில் வன்னியர்களின் பங்கு மிக மிக சொற்பமாக உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என பாமக கோரிக்கை வைக்கிறது. ஆனால் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை எனப் பொய் சொல்கிறார். புள்ளியியல் சட்டத்தின்படி ஒரு பஞ்சாயத்து தலைவர் தன் கிராமத்தில் எத்தனை பேர் படித்திருக்கிறார்கள்?. எத்தனை பேர் கல்வி கற்றிருக்கிறார்கள் எத்தனை பேர் பொருளாதாரத்தில் உயர்ந்து நிற்கிறார்கள் என்பதை கணக்கிட உரிமை உள்ளது.
முதலமைச்சருக்கும் அது போன்று மாநில அளவில் கணக்கெடுப்பு நடத்த உரிமை உள்ளது. ஆனால் முதலமைச்சர் கணக்கெடுப்பு நடத்த மறுக்கிறார். ஆனால் ஒன்று மட்டும் நான் சொல்கிறேன் இன்று மட்டும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இருந்திருந்தால் நிச்சயம் சமூக நீதி அடிப்படையிலே இந்த சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி இருப்பார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நிதி அதிகாரம் உள்ளிட்ட அனைத்தும் உள்ளது. ஆனால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடம் மனமில்லை.
நீங்கள் வசனம் பேசினால், சினிமாகாரர்கள் பின்னால் போய்விடுகிறீர்கள். அடுக்குமொழியில் பேசினால் அவர்கள் பின்னால் சென்று விடுகிறீர்கள். யார் யாரோ பின்னால் நீங்கள் செல்கிறீர்கள் அவர்கள் பின்னால் செல்லாதீர்கள். என் பின்னால் வாருங்கள். தமிழ்நாட்டில் தனிப்பெரும் சமுதாயமான வன்னிய சமுதாயத்தை வாக்கு வங்கிகளாகப் பார்க்கிறார்கள்.” என்றார்.
Advertisement
Next Article