அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றால், எலான் மஸ்க்குக்கு என்ன பதவி?.. வெளியான புதிய தகவல்!
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றால், ஆலோசகர் பதவியை எலான் மஸ்குக்கு வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறும். அமெரிக்காவில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி என இரண்டு பிரதான காட்சிகள் உள்ளன. இந்த இரு கட்சிகளில் இருந்தும் அதிபர் தேர்தலில் போட்டியிட அதிகமானோர் விருப்பம் தெரிவிப்பார்கள். அவர்கள் அந்தந்த கட்சிக்குள் அவர்களது செல்வாக்கை நிரூபிக்க வேண்டும். பின்னர், அதிக செல்வாக்கு பெற்ற இருவர் மக்களின் வாக்குகளுக்கு முன் அமர்த்தபட்டு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நிகழாண்டு அதிபர் தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட ஜனநாயக கட்சி சார்பாக தற்போது அதிபராக இருக்கும் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சி சார்பாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் முன்னிலையில் இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த தேர்தலில் டிரம்ப் வெற்றிப் பெற்றால் அவரின் ஆலோசகராக எலான் மஸ்க் பதவி வகிப்பார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சமீபகாலமாக பைடன் தலைமையிலான அரசின் மின்சார வாகனக் கொள்கைகள் குறித்து வெளிப்படையாக மஸ்க் விமர்சித்தாலும், டிரம்புக்கான ஆதரவை இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. டிரம்பும் மஸ்கின் ஆதரவு தனக்கு இருக்கிறதா என்பது தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.