"பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு முறை இருக்காது" - விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
"பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு முறை இருக்காது" என விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்னுபிரசாந்த் ஆகிய இரு வேட்பாளர்களையும் ஆதரித்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் பொன்முடி, எம் ஆர்கே பன்னீர்செல்வம், ஏ வ வேலு, செஞ்சி மஸ்தான், சிவி கணேசன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் மற்றும் திமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
“ இந்தியா கூட்டணியின் பிரதமர் டெல்லி செங்கோட்டையில் கொடியேற்ற ஆதரவு கேட்க வந்துள்ளேன். கடலூரில் முத்து நகரில் 100 கோடி மதிப்பீல் புனரமைப்பு பணி கடந்த மூன்று வருடங்களாக செய்து தொடர்ந்து செய்து வருகிறோம். ஆளுநருக்கு மாநில உரிமைகள் குறித்து பாடம் எடுக்கும் பேராசிரியராக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி உள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன் ஆதரவு பெற்ற வேட்பாளர் ரவிக்குமார் ஒரு எழுத்தாளர் , பத்திரிக்கையாளர், களப்போராளி, பன்முக திறமை கொண்ட வேட்பாளராக சிறப்பாக செயல்படுகிற அவருக்கு பானை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். அதேபோல கடலூரில் போட்டியிடும் விஷ்னு பிரசாந்த்துற்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இவர்கள் இருவரையும் தமிழ்நாட்டின் குரலாக ஒளிக்க அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு முறை இருக்காது. சமூக நீதியை சவக்குழி தோண்டி புதைத்து விடுவார்கள் என்பதால் தான் பாஜகவை எதிர்க்கிறோம். சமூக நீதிக்கான ஆட்சியை தமிழகத்தில் நடத்தி வருகிறோம். பிற்படுத்தப்பட்டோர் விழுக்காட்டிற்காக சட்டநாதன் அமைச்சகத்தை கலைஞர் அமைத்தார். தமிழகத்தில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு இருக்க காரணம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிதான்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத பாஜகவுடன் ராமதாஸ் கூட்டணி வைத்துள்ளார். *பாஜகவிற்கு மதிப்பு எவ்வளவு கொடுப்பீர்கள் என ராமதாசிடம் கேட்டபோது பூஜ்யத்திற்கு கீழே கொடுப்பேன் என ராமதாஸ் தெரிவித்தார். ஆனால் அவருடன் ராமதாஸ் கூட்டணி வைத்துள்ளார். யாமரிய பராபரனே என்று சந்தர்ப்ப வாத கூட்டணியை ராமதாஸ் வைத்துள்ளார்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.