“உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பொருட்கள் கண்டறியப்பட்டால் பஞ்சுமிட்டாய் தடை செய்யப்படும்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை
பஞ்சு மிட்டாய்களில் சேர்க்கப்படும் ரசாயன கலவையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் தமிழ்நாட்டில் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“புதுச்சேரியில் விற்கப்படும் பஞ்சுமிட்டாயில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் உணவு பாதுகாப்புத் துறையில் உள்ள உயர் அதிகாரிகள் மூலம் பஞ்சு மிட்டாய்களை ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்ற வருகின்றன. அதில் சேர்க்கப்படும் ரசாயன கழிவுகளில் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனம் சேர்க்கப்பட்டிருந்தால் தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய்க்கு தடை விதிக்கப்படும்.
இந்தியாவில் ஒரு முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை இரண்டாவது முறை பயன்படுத்தக் கூடாது என்னும் நடைமுறை உள்ளது. இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : ஜனவரி 2024-ல் அதிகம் விற்பனையான டாப் 10 கார்கள்
பூந்தமல்லியில் குப்பைத் தொட்டியில் குழந்தையை வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக எந்த குழுவும் அமைக்கப்படவில்லை. உணவு பாதுகாப்புத்துறையில் ஆட்கள் பற்றக்குறை எதும் இல்லை. அவர்கள் அவர்களது பணிகளை செய்து வருகிறார்கள்”
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.