Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழர்கள் வாழும் தாராவி மறுசீரமைப்பு டெண்டர் ரத்து” - உத்தவ் தாக்கரே!

03:47 PM Jul 20, 2024 IST | Web Editor
Advertisement

மகாராஷ்டிராவில் தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அதானி குழுமத்திற்கு அளிக்கப்பட்ட தாராவி மறுசீரமைப்பு திட்டம் ரத்து செய்யப்படும் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 

Advertisement

மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்ட தாராவி குடிசை மறுசீரமைப்பு டெண்டரை ரத்து செய்வோம். மும்பையை அதானி நகரமாக மாற்ற அனுமதிக்கமாட்டோம். நாங்கள் கூடுதல் சலுகைகள் எதையும் வழங்கமாட்டோம்.

தாராவியில் வாழும் மக்களுக்கு எது நல்லதோ அதை செய்வோம். தேவைப்பட்டால் புதிய டெண்டரை வழங்குவோம்” என தெரிவித்துள்ளார்.

மும்பை தாராவி பகுதி தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இங்குள்ள ஆயிரக்கணக்கான குடிசைகளை இடித்து விட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வருகிறது. இத்திட்டத்தை நிறைவேற்ற பல முறை டெண்டர் விடப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. கடைசியாக டெண்டர் விடப்பட்டதில் தாராவி குடிசை மேம்பாட்டுத்திட்டம் செயல்படுத்தும் ஒப்பந்தத்தை அதானி நிறுவனம் பெற்றுள்ளது.

தாராவியில் தகுதியுள்ள அனைவருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் மாற்று வீடுகள் வழங்கப்படும் என்று அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது. இலவச வீடு பெற தகுதியில்லாதவர்களுக்கு மும்பையில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் முலுண்ட் மற்றும் வடாலா பகுதியில் இருக்கும் உப்பள நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு அங்கு குடியமர்த்தப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வீடுகளுக்கு கட்டுமான செலவை மட்டும் குடிசைவாசிகள் அதானி நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டும். தாராவி குடிசை மறுசீரமைப்பு திட்டத்திற்கு அதானி நிறுவனத்துடன் மாநில அரசு ஒப்பந்தம் செய்து கொண்டு கூட்டு நிறுவனம் ஒன்றையும் ஆரம்பித்துவிட்டது.

Tags :
adani groupDharavi Redevelopment ProjectMaharashtrashiv senaUddhav Thackeray
Advertisement
Next Article