"நானும், ரஜினியும் வாழ்த்தினால் படம் ஓடுமா என்றால் அது இல்லை" - கவிஞர் வைரமுத்து ஆதங்கம்!
வ.கெளதமன் இயக்கி நடிக்கும் படையாண்ட மாவீரா திரைபடத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் எழுதியிருக்கிறார். இந்த நிலையில் சென்னையில் நடந்த விழாவில் இன்றைய சினிமா குறித்து கவிஞர் வைரமுத்து ஆதங்கத்துடன் பேசியுள்ளார். அப்போது, "ஒரு படத்தின் வெற்றி என்பது விழாக்களால் தீர்மானிக்கப்படுவது இல்லை. திரைப்பட உலக போக்கு ரொம்பவே துன்பப்படுகிற நிலையில் இருக்கிறது. ஆண்டுக்கு 200 படங்கள் வெளிவரும்போது, 10 படங்கள் மட்டுமே வெற்றிக்கு பக்கத்தில் இருக்கின்றன.
நிகழ்கால படங்களில் நிறைய பலவீனங்கள் இருக்கின்றன. நம்மிடையே மிகப்பெரிய தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் ஏன் 190 படங்கள் பின்வாங்குகின்றன என்பதை சற்றே யோசித்து பார்க்க வேண்டும். காரணம், வாழ்க்கை பார்த்து படம் எடுக்காமல் சினிமா பார்த்து படம் எடுக்கிறார்கள். கடந்து போன, தொட்ட வாழ்க்கையை படமாக எடுத்தால் அது ஓடும். அதில் ரசிகன், திரைக்கும் இடையே தொடர்பு இருக்கும். வாழ்க்கையுடன் சம்பந்தம் இல்லாமல் போனதால் பல படங்கள் விலகிவிட்டன.
தமிழகத்தில் 8 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். 6 கோடி பேர் இருந்தபோது 75 சதவீதம் பேர் படம் பார்த்தார்கள். 7 கோடி ஆனபோது அது 60 சதவீதம் ஆனது. இப்போது 8 கோடியில் 35 சதவீதம் பேர் தான் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கிறார்கள். திரைப்படங்கள் மீதான காதல் போய்விட்டதா என தெரியவில்லை. தொழில் நுட்பத்தால் வளர்ந்த சினிமா, அதனாலேயே அது ஒதுங்கிவிட்டது. சினிமாவில் இப்போது கதாசிரியர்கள், வசனகர்த்தா என்பவர்கள் இல்லை. திரைக்கதை என்ற ஜாதி இல்லை. இப்போதுள்ள பல இயக்குனர்கள் தனது உதவி இயக்குனரிடம் கூட கதை சொல்வது இல்லை.
பத்து மூளைகளால் செழுமைப்படுத்தப்பட்ட சினிமா வெற்றி அடைந்துவிட்டது. இப்போது ரசிகர்கள் குறைந்து விட்டார்கள். திருமண வீடியோக்களை கூட சினிமா மாதிரி எடுக்கிறார்கள். சினிமா மீதான ரகசியம், பூடகம் போய்விட்டதா என்று தெரியவில்லை. நான் அனைத்து படங்களுக்கும் ஒரே மாதிரி பாடல் எழுதுகிறேன். அந்த வரிகளை படித்து காண்பிக்கிறேன். சிலர் அதை ரசித்து கூட பார்ப்பது இல்லை. எழுதுவது உன் வேலை என்று பாடலை வாங்கிக்கொண்டு செல்கிறார்கள். நானும், ரஜினிகாந்த் வாழ்த்தினால் படம் ஓடுமா என்றால் அது இல்லை.
திரைக்கும், பார்வையாளர்களுக்கு இடையே யாரும் நிற்க முடியாது, கடவுள் வந்தாலும் பார்வையாளர்களை கன்வின்ஸ் செய்ய முடியாது. பொய் சொன்னால் அவன் முகத்தில் ஷாக் அடிக்கிற ஒலி பெருக்கியை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க வேண்டும். பாராளுமன்றம், சட்டமன்றம், பொது மேடைகளில் அந்த ஒலி பெருக்கியை வைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.